பிகில் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து.. தலையில் லைட் விழுந்ததால் காயமடைந்த ஊழியர் மரணம்!
பிகில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஊழியர் செல்வராஜ், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை: பிகில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஊழியர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் பிகில் எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தீபாவளிக்கு ரிலீசாக உள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இவிபி பிலிம் சிட்டியில் பிகில் படத்திற்கான செட் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது 100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த மின்சார விளக்கு, செல்வராஜ் என்ற ஊழியர் தலையில் விழுந்தது. இதில், அவர் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக செல்வராஜ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த செல்வராஜை நேரில் வந்து பார்த்து சென்றார் விஜய். அப்போது செல்வராஜின் குடும்பத்தாருக்கு அவர் ஆறுதலும் கூறினார்.
இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்த செல்வராஜ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையறிந்த தயாரிப்புக்குழு அவரை பார்க்க கிளம்பியது. பிகில் படத்தின் இறுதிக்கட்ட பேட்ச் ஒர்க் ஷூட்டிங்கில் இருந்த விஜய்யும், இந்த தகவலைக் கேள்விப்பட்டு கடும் வேதனை அடைந்தார். படப்பிடிப்பை நிறுத்தி விட்டு அவரும் சென்று செல்வராஜ் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
செல்வராஜ் மரணத்தால் பிகில் படக்குழு சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இது சினிமா துறையில் செட் போடுபவர்கள் போன்ற இதர துறையில் பணியாற்றுபவர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய பாதுகாப்பு இன்றி பல படங்களின்/சீரியல்களின் ஷூட்டிங் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலை நேரத்தில் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் வகையில் சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











