பிஜிலி ரமேஷ் உயிரிழப்பு.. நடுரோட்டில் நிற்கிறோம்.. நாங்கள் அனாதை.. யாராவது உதவுங்கள்.. கதறும் மனைவி
சென்னை: ஒரு பிராங்க் ஷோ மூலம் வெகுவாக பிரபலமடைந்தவர் பிஜிலி ரமேஷ். அந்த பிராங்க் வெளியான சமயத்தில் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்துக்குரிய் நபராக மாறினார் ரமேஷ். அதன் பிறகு காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்தார். ஆனால் அவருக்கு இருந்த குடி பழக்கம் அவரை படுக்கையில் தள்ளியது. சிகிச்சை எடுத்துவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக அவரது குடும்பம் நிலைகுலைந்து போயிருக்கிறது.
சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட காலம் இது. அப்போதெல்லாம் பிரபலமாக வேண்டும் என்றால் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி; சினிமாவில் அறிமுகமாகி; அதில் கடுமையாக உழைத்தால்தான் நடக்கும். ஆனால் இப்போது சமூக வலைதளங்கள் பெருகிவிட்டதால் அதன் மூலமே பிரபலமானவர்கள் தற்போது ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். அது ஒருவகையில் ஆரோக்கியமான விஷயமும்கூட.

பிஜிலி ரமேஷ்: அப்படி சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் பிஜிலி ரமேஷ். தனியார் யூட்யூப் சேனல் ஒன்று பொதுமக்களை பிராங்க் செய்வது வழக்கமாக வைத்திருந்தது. அப்படி அவர்கள் சராசரியாக பிராங்க் செய்ததுதான் பிஜிலி ரமேஷ். அதில் அவர் பேசிய விதம், அவரது நடவடிக்கைகள் அனைத்துமே சமூக வலைதளவாசிகளால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதனால் ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனார் ரமேஷ்.
பட வாய்ப்புகள்: பிரபலமாகிவிட்ட பிஜிலி ரமேஷுக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதன்படி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். மேலும் நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; தொடர்ந்து தனியார் சேனல் ஒன்றில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். சூழல் இப்படி இருக்க கடந்த சில காலமாகவே பிஜிலி ரமேஷ் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது.
உயிரிழந்த ரமேஷ்: அண்மையில் பிஜிலி ரமேஷ் பற்றி செய்திகள் வெளியாக தொடங்கின. அதாவது குடி பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ் அதன் காரணமாக கல்லீரல் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக மாறினார். சில மாதங்களுக்கு முன்புகூட தனது நிலைமை குறித்து உருக்கமாக பேட்டியளித்திருந்தார். சூழல் இப்படி இருக்க சிகிச்சை எடுத்துவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் காரணமாக அவரது குடும்பம் நிலைகுலைந்து போயிருக்கிறது.
ரமேஷ் மனைவி பேட்டி: இந்நிலையில் பிஜிலி ரமேஷின் மனைவி அளித்த பேட்டி ஒன்று காண்போரை கலங்கடிக்க செய்திருக்கிறது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "குடி பழக்கத்தால் எனது கணவருக்கு கல்லீரல் மொத்தமாக டேமேஜ் ஆகிவிட்டது. போன மாதம் வரை நன்றாகத்தான் இருந்தார். ஆனால் திடீரென மூச்சு வாங்கியது. பிறகு என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக சொன்னார். ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.
கைவிரித்த மருத்துவர்கள்: மருத்துவர்களிடம் நாங்கள் எப்படியாவது இவரது உயிரை காப்பாற்றி கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சினோம். அதற்கு அவர்களோ எங்களால் முடிந்தவரை பார்க்கிறோம். அதற்கு மேல் ஆண்டவனை வேண்டிக்கொள்ளுங்கள் என்று கையை விரித்துவிட்டார்கள். கல்லீரல் அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்றார்கள். ஆனால் தனியாரில் செய்தால் 60 லட்சம் ரூபாய்வரை வரும். அந்த அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. இவர் சென்ற பிறகு எப்படி சமாளிப்பது என்றுதான் புரியவில்லை.
யாராவது உதவுங்கள்: எனது மகனை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். யாராவது பெரிய ஆள் இதை பார்த்தால் எங்களுக்கு உதவி செய்யுங்கள். இந்தக் குடும்பத்தை கண் திறந்து பாருங்க. அதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். குடும்பமே அழிந்துபோய் நடு ரோட்டில் நிற்கிறோம். கண்டிப்பாக யாராவது உதவி செய்வார்கள் என்று நம்புகிறோம்" என்றார் உருக்கமாக.


Click it and Unblock the Notifications











