இமயம் சரிந்து விட்டது.. கடைசியா என்ன சொன்னார்?.. ’பிஜிலி ரமேஷ்’ மனைவி கண்ணீர் பேட்டி
சென்னை: பிராங்க் ஷோ மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் தீவிரமான ரஜினிகாந்த் ரசிகர் ஆவார். தமிழில் சில படங்களிலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட அவருக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் அவருக்கு இருந்த குடி பழக்கத்தால் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டது. எனவே தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர்; நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சூழலில் அவரது மனைவி மோகனா செய்தியாளர்களிடம் கண்ணீரோடு பேசினார்.
யூட்யூப் சேனல் ஒன்றில் சில வருடங்களுக்கு முன்னர் பிராங்க் ஷோ வெகு பிரபலமாக இருந்தது. அப்படி அந்த பிராங்க் ஷோவில் வந்து அடையாளப்பட்டவர் பிஜிலி ரமேஷ். அவரது பேச்சும், பாடி லாங்குவேஜும் வித்தியாசமாகவும், சிரிப்பு வரும்படியும் இருந்ததால் சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்களுக்கு அவரது புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன. அதனையடுத்து யூட்யூப் சேனல்கள் பல அவரை தொடர்ந்து பேட்டிகளும் எடுக்க ஆரம்பித்தன. இதன் காரணமாக பிஜிலி ரமேஷ் ஃபேமஸ் ஆனார்.

சினிமா வாய்ப்புகள்: அதனையடுத்து சினிமா வாய்ப்புகளும் அவருக்கு தொடர்ந்து கிடைத்தன. அதன்படி கோமாளி, நட்பே துணை, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன வேடங்களிலும் தனது முழு திறமையை காண்பித்தார். இதன் காரணமாக அவரை ரசிகர்கள் ரசிக்கவும் செய்தனர். மேலும் சினிமா வாய்ப்புகளும் அவருக்கு தொடர்ந்து கிடைத்தன. எனவே சினிமாவை பயன்படுத்தி வறுமையிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற முடிவில் இருந்தார் ரமேஷ்.
சாய்த்த குடி: ஆனால் எமனாக வந்தது அவருக்கு இருந்த குடி பழக்கம். ஃபேமஸ் ஆனதற்கு முன்பிருந்தே அவர் குடி பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார் என்று கூறப்படுகிறது. எனவே வளர்ந்துவரும் சமயத்தில் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலையையும் அவரது உடல் கடந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்னர்கூட ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை கடந்த 24ஆம் தேதி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர் குடும்பத்தினர். ஆனால் நேற்று இரவு 10லிருந்து 10.30 மணியளவில் ரமேஷின் உயிர் பிரிந்திருக்கிறது. அதனை அவரது மனைவி உறுதி செய்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கவிருக்கிறது. ரமேஷுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணீர் மல்க பேட்டி: இந்நிலையில் ரமேஷின் மனைவி மோகனா செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், "எனது கணவர் ரொம்ப நல்லவர். யாரிடமும் கெட்ட பெயர் வாங்காதவர். சின்ன பட்ஜெட் படமோ பெரிய பட்ஜெட் படமோ கொடுக்கும் தொகையை வாங்கிக்கொண்டு வருவார். ரஜினியின் தீவிர ரசிகர். வேட்டையன் அல்லது கூலி படங்களில் நடித்துவிட வேண்டும் என்பது அவரது ஆசை.
கடைசியாக சொன்னது: ஆனால் உடல்நிலை சரியில்லாமல் போனது. 15 நாட்கள் கழித்து கடந்த 24ஆம் தேதிதான் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தோம். அன்றுதான் எங்களுக்கு திருமண நாள். அப்போது என்னிடம் அவர் அடுத்த திருமண நாளுக்கு நான் இருக்கமாட்டேன் என்று சொன்னார். அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது என்று நாங்கள் சொன்னோம். நேற்று இரவு என்னிடம் லிம்கா வாங்கிவர சொன்னார். அதனை வாங்கி வைத்துவிட்டு எனது செல்ஃபோனுக்கு சார்ஜ் போட சென்றேன். அப்போது எனது கால் அவர் மீது பட்டுவிட்டது. எப்போதும் கால் பட்டால் கத்துபவர் நேற்றிரவு அப்படியே கிடந்தார். என்னாச்சு என்று பார்த்தபோதுதான் அவர் இறந்தது தெரியவந்தது. இமய சரிந்துவிட்டது. என்னை அவர்தான் வழிநடத்தினார்" என்றார்.


Click it and Unblock the Notifications











