டிசம்பர் இரண்டாவது வாரம் பிரியாணி... கார்த்தியின் தோல்விகள் முடிவுக்கு வருமா?
சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா என அடுத்தடுத்து தோல்விப் படங்களாக அமைந்துவிட்டதால் டென்ஷனில் இருக்கும் கார்த்தி, தன் அடுத்த படமான பிரியாணியை முன்கூட்டியே கொண்டு வருகிறார்.
டிசம்பர் 2வது வாரத்தில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் தனது சரிவுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என நம்புகிறார்.
பையாவுக்குப் பிறகு ப்ளேபாய் வேடத்தில் பிரியாணியில் தோன்றுகிறார் கார்த்தி. இதுகுறித்து கார்த்தி கூறுகையில், "படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்குண்டான அச்சம் எதுவுமின்றி ஒரு உல்லாச பயண உணர்வோடு நான் மிகவும் ரசித்து நடித்த படம் பிரியாணி.

வெங்கட் பிரபு படம்
இது முற்றிலும் வெங்கட் பிரபு முத்திரையுள்ள படம். நான், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் சங்கர் ஆகியோர் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். எனவே நாங்கள் ஒன்று சேர்ந்து படத்துக்காக பணியாற்றும் போது மிகவும் ஜாலியாக பணியாற்றினோம்.

வித்தியாசமான பாடி லாங்வேஜ்
நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பாக படம் முழுக்க ஜாலி மூட் இருக்கும். படத்தின் பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என்று எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளது. பிரியாணியில் என்னுடைய பாடி லாங்வேஜையே முற்றிலும் மாறுபட்ட பாணியில் என்னை நடிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு.
ஹன்சிகா படபிடிப்பு வேளையில் சீரியஸாக இல்லாமல் எந்த வித பதற்றமுமின்றி உற்சாகத்துடன் நடித்துள்ளார்.

மண்டி தக்கர்
மேலும் மண்டி தக்கர் என்ற பஞ்சாப் நடிகை படத்தில் திருப்புமுனை கதாப்பாத்திரமாக வருகிறார். இவர் வசனங்களை மனப்பாடம் செய்து சொல்லி நடித்த விதம் எல்லோரையும் வியப்படைய வைத்துள்ளது.

ராம்கி
என் சீனியர் ஆன ராம்கி அவர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும்.அவருடைய ரசிகனாக சினிமா பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

யுவனுக்கு 100வது படம்
யுவனுக்கு பிரியாணி 100 வது படம். அவரது பங்களிப்பும் உழைப்பும் படத்தை மேலும் மெருகூட்டியுள்ளது. எல்லோரையும் ஈர்க்கும் சுவாரஸ்யமான த்ரில்லர் படமாக பிரியாணி அமையும் என்று சொல்லி முடித்தார் கார்த்தி.


Click it and Unblock the Notifications











