'ஓ.. போலீசுக்குப் போகணுமில்ல..' - சிபிசிஐடி அலுவலகத்தில் 'பிரியாணி டீம்' புகார்!!
சென்னை: பிரியாணி படத்தின் பாடல்கள் முழுவதும் லீக் ஆகிவிட்டது தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் தர முடிவு செய்துள்ளனர் பிரியாணி படக் குழுவினர்.
கார்த்தி - ஹன்சிகா நடித்துள்ள புதிய படம் பிரியாணி, வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் மூலம் தயாரித்துள்ளார்.

யுவனின் 100 வது படம்
இந்தப் படம் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகும் 100வது படமாகும். 1996-ல் தனது இசைப் பயணத்தைத் தொடங்கியயுவன் 17 ஆண்டுகளில் இந்த சாதனையைச் செய்துள்ளார். எனவே இந்தப் படத்தின் இசையை மிகச் சிறப்பான விழாவாகக் கொண்டாட முடிவு செய்திருந்தனர். வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி யுவன் பிறந்த நாள். அந்த நாளில் விழா எடுத்து இசை வெளியீடு நடக்கும் என வெங்கட் பிரபு அறிவித்திருந்தார்.

இணையத்தில்...
ஆனால் திடீரென இரு தினங்களுக்கு முன் மொத்தப் பாடல்களும் இணையதளத்தில் வெளியாகிவிட்டது, நல்ல ஒலித் தரத்துடன். இது யாருக்கு அதிர்ச்சியோ இல்லையோ... யுவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

சோனி
இந்தப் பாடல்களின் உரிமையா சோனி நிறுவனம் பெற்றிருந்தது. அவர்களிடம் கடந்த மாதம் மாஸ்டர் சிடியை ஒப்படைத்துவிட்டார் யுவன். நல்ல தொகை கொடுத்து பாடல் வெளியீட்டு உரிமையைப் பெற்ற சோனி, விளம்பர உத்தியாக அவற்றை இணையத்தில் வெளியிட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.

மறுக்கவில்லை...
இந்தக் குற்றச்சாட்டு, மீடியாவில் பரபரப்பான செய்தியாக வரத் தொடங்கிய போதும், அதை மறுக்கவில்லை சோனி நிறுவனம். தயாரிப்பாளரைப் பொறுத்தவரை இதில் அவருக்கு நஷ்டம் எதுவுமில்லை என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இன்று புகார்...
ஆனாலும் இப்படி ஒரு பகிரங்க ஆன்லைன் மோசடி நடந்திருப்பது, இசையமைப்பாளர் என்ற வகையில் யுவனுக்கு அதிக பாதிப்பு என்பதால், இப்போது புகார் தரக் கிளம்பியுள்ளது பிரியாணி குழு. இன்று கிண்டியிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் யுவன், வெங்கட் பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் இணைந்து புகார் தந்துள்ளனர்.

எல்லாம் தெரிந்தும்...
பாடல்கள் எப்படி வெளியாகின என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. யார் அதற்குக் காரணம் என்றும் தெரிந்திருக்கிறது... ஆனாலும் புகார் தருகிறார்கள். எல்லாம் சினிமா..!
சிபிசிஐடி அலுவலகத்தில் 'பிரியாணி டீம்'


Click it and Unblock the Notifications











