19 வயசுல ஓவர் ஆட்டம்.. பீனிக்ஸ் டீசர் சுத்தமா பிடிக்கல.. விஜய் சேதுபதி மகன் பற்றி பிஸ்மி பேச்சு!
சென்னை: விஜய் சேதுபதியின் மகன் என்பதால் தான் சூர்யா விஜய் சேதுபதிக்கு படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முதல் படத்திலேயே தந்தையின் பெயரை பயன்படுத்த மாட்டேன் என பேசுவது எல்லாம் சரியான அணுகுமுறை கிடையாது என பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சூர்யா விஜய் சேதுபதி என்று கூட தனது பெயரை பயன்படுத்த மாட்டேன், அப்பா வேற நான் வேற என் பேரு வெறும் சூர்யா மட்டும் தான் என்றெல்லாம் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பேசி வருவது சமூக வலைத்தளங்களில் அவர் தொடர்பாக ஏகப்பட்ட ட்ரோல்களை உருவாக்கியுள்ளது.

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'பீனிக்ஸ் வீழான்' திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க காரணமும் விஜய் சேதுபதி தான் என பிஸ்மி கூறியுள்ளார்.
19 வயதில் ஓவர் ஆட்டம்: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். அவர் நடித்த 'பீனிக்ஸ் வீழான்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. படத்தின் பூஜைக்கு அப்பா விஜய் சேதுபதியை அழைக்காத சூர்யா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வலைப்பேச்சு பிஸ்மி தனது புதிய பேட்டியில் விஜய் சேதுபதியின் மகன் தான் என சொல்வதற்கு சூர்யா மறுப்பு தெரிவிப்பது ஏன் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார். எப்படி இருந்தாலும், அவருக்கு கிடைத்த வாய்ப்புக்கு காரணமே விஜய் சேதுபதி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மக்களை கவர வேண்டும்: சாதாரண துணை நடிகராக இருந்த விஜய் சேதுபதி மக்கள் செல்வனாக ஏகப்பட்ட மக்களின் அன்பைப் பெற்று இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். அதே போல விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தொடர்ந்து தனது நடிப்பை வெளிக்காட்டி மக்களின் மத்தியில் இடம் பிடித்தால் மட்டுமே ஹீரோவாக வரமுடியும் எனக் கூறியுள்ளார்.
பீனிக்ஸ் டீசர் பிடிக்கவில்லை: அனல் அரசு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் டீசர் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என பிஸ்மி அந்த பேட்டியில் பளிச்சென கூறியுள்ளார். சிறுவர் சீர்திருத்த பள்ளி, பாக்சிங் அடிதடி ஆக்ஷன் காட்சிகள், விஜய் சேதுபதி மேனரிசம் என சூர்யா நடிப்பில் எதுவுமே புதிதாக தெரியவில்லை. படத்தின் டீசர் ரசிகர்களையும் பெருமளவில் கவரவில்லை. படம் வரட்டும் எப்படி இருக்கிறது என பார்ப்போம் என பிஸ்மி பேசியுள்ளார்.
100 கோடியை தொடும்: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் நிச்சயம் 100 கோடி வசூலை தொடும் என தகவல்கள் வெளியாகி இருப்பதாக பிஸ்மி கூறியுள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல், 96 படங்களை தவிர்த்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பல படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தான் கொடுத்தன. பெரிதாக எந்த படமும் ஓடவில்லை. இந்த படம் ஓடியதற்கும் விஜய் சேதுபதி காரணமில்லை. படத்தின் இயக்குநர் நித்திலன் தான் காரணம். விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் எப்படி இருக்கப் போகிறது என்பதையும் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











