விஜய்க்கு எதிராக நடக்கும் சதிக்கு ரஜினிகாந்த் தான் காரணமா?.. பிஸ்மியோட கற்பனைக்கு அளவே இல்லை
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்க ஆளுநரிடம் முறையிட்டும் ஆளுநர் முதலமைச்சராக விஜய்க்கு பதவியேற்பு செய்து வைக்காமல் இருக்கிறார். இப்படி இருக்கும் போது, இணையத்தில் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும் வதந்திகள் பலவும் பரவி வருகிறது. இந்நிலையில் திரையுலகில் நன்கு அறியப்பட்ட வலைப்பேச்சு பிஸ்மி, விஜய்க்கு எதிரான சதிக்கு ரஜினி தான் காரணம் என்ற கோணத்தில் பதிவிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில், தவெகவின் வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் கொளத்தூர் தொகுதியில் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிட்டத்தட்ட 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்படி இருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
உண்மைக்கு மாறான தகவல்: இப்படி இருக்கையில், மே 6ஆம் தேதியில் இருந்து, திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என்றும், திமுக அதற்கு ஆதரவு அளிக்கும் என்றும் கொஞ்சம் கூட உண்மையற்ற, அடிப்படைத் தன்மை இல்லாத தகவல்களை சிலர் வேண்டும் என்றே பரப்பினர். சில முன்னணி ஊடகங்களிலும் கூட இது போன்ற யூகத் தகவல்கள் வெளியானதால், மக்களும் இது தொடர்பாக குறுக்கு விசாரணை கூட இல்லாமல், ஏன் என்ற சிந்தனை கூட இல்லாமல், விஜய்க்கு எதிராக சதி நடக்கிறது என்றும், ஜன நாயகன் படத்தை தான் ரிலீஸ் செய்வதில் கால தாமதம் செய்தீர்கள், இப்போது முதலமைச்சராக பொறுப்பு ஏற்பதையுமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிஸ்மி: சாமானிய மக்களே இது போல அறியாமையில் பதிவிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், பிஸ்மி போன்ற பலராலும் அறியப்பட்ட பிரபலம், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மற்றும் ரஜினிகாந்த் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து, " இந்த சந்திப்புக்குப் பிறகுதான் தமிழக அரசியல் சூழலில் அதிரடி மாற்றங்கள். தவெக ஆட்சி அமைக்க பொறுப்பு ஆளுநர் முட்டுக்கட்டை. மைனாரிட்டி அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு என்ற செய்திகள். ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான். ஆண்டவன் என்பதை ஆள்பவன், ஒன்றியத்தை ஆள்பவன் என்று பொருள்கொள்க" என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ரஜினி - விஜய் ரசிகர்களுக்கு இடையில் பெரும் மோதல் இருக்கும் நிலையில், அதை கொம்பு சீவி விடுவது போல அவரது பதிவு இருக்கிறது என்று பலரும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications