Bison Day 6 Box Office - துருவ் விக்ரமுக்கு கொண்டாட்ட தீபாவளி.. பைசன் 6வது நாள் வசூல் இத்தனை கோடியா?
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் காளமாடன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஒருபக்கம் வசூலில் அடித்து நொறுக்க பைசனும் தனது பங்குக்கு பாக்ஸ் ஆஃபிஸை அலற விட்டுக்கொண்டிருக்கிறது. 5 நாட்களில் 35 கோடி ரூபாய் உலக அளவில் வசூலித்ததாக அறிவிப்பு வந்திருக்கும் நிலையில் நேற்றைய வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
விக்ரமின் மகனான துருவ் விக்ரம் பைசன் படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்வரை காத்திருந்தார். ஒருவழியாக பைசன் ஷூட்டிங் முடிந்த கடந்த 17ஆம் தேதி வெளியானது. போட்டிக்கு டியூட், டீசல் ஆகிய இரண்டு படங்கள் வந்தன. இருந்தாலும் இயக்கம் மாரி செல்வராஜ் என்பதால் படத்தின் மீது உச்சக்கட்ட நம்பிக்கை படக்குழு மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் பலமாகவே இருந்தது.
முக்கியமான படம்: மாரியின் இயக்கம் என்றாலே அது வலியையும், வாழ்வியலையும் சொல்லக்கூடியது என்பது அனைவருக்குமே தெரியும். அதே ஃபார்முலாவைத்தான் இந்தப் படத்திலும் கையாண்டிருந்தார் அவர். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையோடு தென் மாவட்டத்தில் இரண்டு பேரின் பகை ஊர் பகை, சாதி பகையாக மாறுவது, அதனால் இளைஞர் பாதிக்கப்படுவது என ஏகப்பட்ட விஷயங்களை பேசியிருந்தார்.

படம் சூப்பர் ஹிட்: வழக்கம்போல் இதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்தப் படத்தோடு மாரி மொத்தம் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். அந்த ஐந்து படங்களுமே ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தோல்வி படமே கொடுக்காத இயக்குநர்கள் வரிசையில் வெற்றிமாறன் உள்ளிட்டோருடன் தற்போது இணைந்திருக்கிறார் மாரி செல்வராஜ். அனைவருமே படத்தையும், மாரி செல்வராஜையும் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.
துருவ்வுக்கு மறக்க முடியாத தீபாவளி: விக்ரமின் மகனுக்கு இது மறக்க முடியாத தீபாவளியாக மாறியிருக்கிறது. இதற்கு முன்னர் அவர் நடித்த இரண்டு படங்கள் பெரிதாக உயரத்துக்கு கொண்டு செல்லவில்லை. பைசனோ அவரை சிகரத்திலேயே கொண்டு சென்று அமர வைத்திருக்கிறது. முகம் முழுக்க அவ்வளவு மகிழ்ச்சியுடன் தியேட்டர் விசிட்டுகளிலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் காணப்படுகிறார் அவர்.
ஆறாவது நாள் வசூல்: உலகம் முழுவதும் ஐந்து நாட்களில் 35 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. இந்நிலையில் ஆறாவது நாளான நேற்று படம் செய்த வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் மூன்று கோடி ரூபாயை வசூலித்து மொத்தம் 25.50 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











