Blue Sattai: “சாக்கு மூட்டை கேங்ஸ்டர்... ஓ ஜாதி வேற இருக்கா?” கமலுக்கு தக் லைஃப் கொடுத்த ப்ளூ சட்டை
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டது.
தக் லைஃப் என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில் கமலின் கேரக்டர் பற்றிய அப்டேட்டும் வெளியாகியுள்ளது.
தக் லைஃப் டைட்டில் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, படம் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.
இந்நிலையில், தக் லைஃப் டைட்டில் குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

கமலுக்கு தக் லைஃப் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்: கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியானது. அதன்படி தக் லைஃப் என்ற டைட்டிலில் இந்தப் படம் உருவாகிறது. கமலுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்க, AR ரஹ்மான் இசையமைக்கிறார்.
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தக் லைஃப் டீசர், ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இதில், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கேரக்டரில் கமல் நடிக்கவுள்ளார். இந்த பெயர் தேவர் மகன் சக்திவேலையும் நாயகன் பட வேலு நாயக்கரையும் நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

அதேபோல், கமல்ஹாசன் தன்னை காயல்பட்டனக்காரன் என அறிமுகப்படுத்திக்கொண்டு, நெல்லை வட்டார வழக்கில் பேசுவதும் கவனம் ஈர்த்துள்ளது. கமல் ரசிகர்களுக்கு தக் லைஃப் டைட்டில் டீசர் செம்ம ஹைப் கொடுத்தாலும், இன்னொரு தரப்பினர் தங்களது விமர்சனங்களையும் ட்ரோல்களையும் முன்வைத்து வருகின்றனர். அதாவது கமல் மீண்டும் ஜாதி பெயரில் நடிப்பதை பலரும் ஏற்கவில்லை.
"தேவர் மகன்னு படம் எடுத்தா நக்கலா பண்றீங்க? இதோ நாயக்க ராயர் மகன்... இப்ப சாதி ஒழிப்பு பேசு பார்ப்போம்.." என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், இது நாயகன் அல்லது தேவர் மகன் யூனிவர்ஸில் இணையும் படமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல், ப்ளூ சட்டை மாறனும் தனது பங்கிற்கு தக் லைஃப் டைட்டிலையும் கமல்ஹாசனையும் பழைய சாக்கு மூட்டையில் கட்டி வைத்து கலாய்த்துள்ளார்.

அதாவது, "விக்ரம் படத்தை ஹிட்டாக்குனதால நல்ல படங்கள்ல நடிச்ச இவரும் இப்ப கத்தி, துப்பாக்கி, போதைப் பொருள், ஆத்தா, அம்மான்னு கெளம்பிட்டாரு. தேவர் மகன்ல அருவாளை கீழ போட்டுட்டு படிக்க போங்கடான்னு சொன்னவரு, இப்ப சாக்குமூட்டையை தலைல சுத்திக்கிட்டு கேங்க்ஸ்டர் ஆகிட்டாரு டோய்." என கலாய்த்துள்ளார். இன்னொரு பதிவில், "ஓ... ஜாதி வேற இருக்கா? ரைட்டு.." என ஒரே வரியில் போட்டுத் தாக்கியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுக்கு உலக நாயகன் ரசிகர்கள் உலக்கையை தூக்கிக்கொண்டு வந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஜினி, விஜய் என வம்பிழுத்து வந்த ப்ளூ சட்டை மாறன் கைகளில் இப்போது உலகநாயகன் கமல்ஹாசனும் கைதாகி நிற்பது நெட்டிசன்களுக்கு குதூகலமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











