ஹீரோக்களிடமிருந்துதான் பெண்களை காப்பாற்ற வேண்டும்.. அர்ஜுனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கைதான் தற்போது இந்திய அளவில் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. பல்வேறு தரப்பினரிடையேயும் இந்த விஷயத்தில் தொடர்ந்து கருத்துக்கள் கேட்கப்பட்டு அவை பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் இதுகுறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்த விஷயம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி நழுவினார்.
இதனிடையே, தொடர்ந்து இந்த விஷயத்தில் மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லாலும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இவர்களின் மௌனம் சர்ச்சைகளையும் கண்டனங்களையும் ஏற்படுத்திய நிலையில், அம்மா அறிக்கை வெளியாகும்வரையில் தான் காத்திருந்ததாக மம்முட்டி நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை: கேரள விவகாரத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கேரள நடிகர்களோ, அனைத்து மொழிகளின் சினிமாத்துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகள் இருப்பதாகவும் ஹேமா கமிட்டி அறிக்கையால் இந்த விவகாரம் கேரளாவில் வெளிவந்துள்ளதாகவும் சமாதானம் கூறி வருகின்றனர். ஆனாலும் கேரளாவில்தான் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் என சில நடிகைகள் ஒப்புக் கொண்டுள்ளனர். கேரளாவுடன் ஒப்பிடும்போது தமிழில் சிறிது குறைவுதான் என்றும் கூறி வருகின்றனர்.
அர்ஜுன் கருத்து: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து அடுத்தடுத்து கேரள நடிகர்கள், தமிழ் நடிகர்கள் என பாகுபாடின்றி நடிகர்கள், நடிகைகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் தொடர்ந்து மௌனம் காத்துவந்த கேரள முன்னணி நடிகர்கள் மோகன்லால், மம்முட்டியும் மௌனம் கலைத்துள்ளனர். இதனிடையே, நடிகர் ரஜினிகாந்திடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்ற அவரது பதில், அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் அர்ஜுனும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அப்பாவி பெண்கள் பாதிப்பு: செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அர்ஜுன், உலகின் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை பிரச்சினை உள்ளதாக தெரிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் சினிமா ஹீரோ சென்று காப்பாற்ற முடியாது என்றும் அனைவருக்கும் இந்த விஷயத்தில் பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அப்பாவி பெண்கள் நிறைய பேர் பாதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் மூலமாக மட்டுமே நியாயம் கிடைக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இதனிடையே அர்ஜுனின் இந்த பேட்டியை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், அவர்களை காப்பாற்ற சொல்வதே ஹீரோக்கள் கிட்ட இருந்துதான் என்று தெரிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் சினிமா ஹீரோக்கள் சென்று காப்பாற்ற முடியாது என்ற அர்ஜுனின் கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் தற்போது பதில் கொடுத்துள்ளார். தொடர்ந்து இந்த விஷயத்தில் அடுத்தடுத்த பதிவுகளை வெளியிட்டுவரும் ப்ளூ சட்டை மாறன், ஹேமா கமிட்டி குறித்து இன்னும் கேள்வி கேட்கப்படாத நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, நகுல் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











