Blue sattai Maaran: சூரிக்கு பாயாசத்தை போட்டாரா சிவகார்த்திகேயன்.. வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் சூரியின் நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள படம் கொட்டுக்காளி. பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் முன்னதாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. சூரி, அன்னா பென் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.
அடுத்தடுத்து நாயகனாக களமிறங்கி நடித்து வருகிறார் சூரி. கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான விடுதலை மற்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருடன் படங்கள் அவருக்கு ஹீரோவாக அடுத்தடுத்த சிறப்பான வெற்றிகளை கொடுத்துள்ள நிலையில் தற்போது கொட்டுக்காளி படம் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி: நடிகர் சூரி நாயகனாக நடித்து மூன்றாவது படமாக கடந்த 23ம் தேதி வெளியாகியுள்ளது கொட்டுக்காளி படம். கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சூரி. இதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன்பு சசிக்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்களுடன் லீட் கேரக்டரில் சூரி நடித்திருந்த கருடன் படமும் வெளியாகி அவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் கொட்டுக்காளி படம் அவரது நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. கூழாங்கல் என்ற படத்தை இயக்கி சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருந்த வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி உருவாகியுள்ளது.
உலகநாயகன் பாராட்டு: இந்தப் படத்தை பார்த்த பல திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டுக்களை பகிர்ந்துள்ளனர். படத்தில் பாடல்களும் இசையும் இல்லாத நிலையில், இதுவே மிகப்பெரிய முயற்சியாக பார்க்கப்பட்டது. இயற்கையின் ஒலிகளையும் இந்தப் படத்தின் இசையாக கொண்டு ரசிகர்களை கவர முயற்சித்துள்ளார் வினோத் ராஜ். படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தில் சூரி என்ற நடிகரை பார்க்க முடியவில்லை என்றும், சில நிமிடங்களிலேயே அவர் பாண்டியன் என்ற கேரக்டராகவே நமது கண்களுக்கு தெரிவதாகவும் கூறியுள்ளார். ஆணாதிக்க குறியீடுகளாக படத்தில் காட்டப்படும் விஷயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தொடரும் பாராட்டுக்கள்: இதேபோல இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், ராம், மிஷ்கின், பா ரஞ்சித் உள்ளிட்டவர்களும் கொட்டுக்காளி படத்தின் கதைக்களம், சூரி, அன்னாபென்னின் நடிப்பு ஆகியவற்றை உச்சி முகர்ந்துள்ளனர். இயக்குநர் வினோத்ராஜின் இத்தகைய முயற்சிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. முன்னதாக பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்றுள்ள கொட்டுக்காளி படத்தை தயாரித்துள்ள சிவகார்த்திகேயனுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. முன்னதாக பல பேட்டிகளில் இந்தப் படத்தின் பல விஷயங்களையும் அவர் பாராட்டி பேசியிருந்தார்.

சிவகார்த்திகேயனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் இந்தப் படம் கடந்த இரு தினங்களில் சில லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. படம் சாதாரண ரசிகர்களை கவர தவறிவிட்டதோ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் வரவேற்பு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பேசியுள்ள ப்ளூ சட்டை மாறன், பழைய விவேக் பட காமெடியை வைத்து சிவகார்த்திகேயனை வம்பிழுத்துள்ளார். தொடர்ச்சியாக இரண்டு ஹிட் கொடுத்த சூரி, இப்படியே விட்டால் தனக்கு போட்டியாக வந்துவிடுவான் என்றும் ஹாட்ரிக் வெற்றியை தடுக்க, சூரியை வைத்து நாமே சொந்தமாக படமெடுத்து பாயசத்தை போட்டுவிட வேண்டியதுதான் என்றும் அவர் வம்பிழுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











