கைகால் விழுந்துடுச்சு.. வெங்கல் ராவுக்காவது வடிவேலு உதவி செய்வாரா?.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி!
சென்னை: சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய வெங்கல் ராவ் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். வடிவேலுவுடன் ஏகப்பட்ட பேர் துணை காமெடி நடிகர்களாக நடித்துள்ள நிலையில், பலரது நிலைமையும் படு மோசமாகவே இருக்கிறது.
போண்டா மணிக்கு கடைசி வரை வடிவேலு உதவாமல் இருந்த நிலையில், அவரது உயிரும் பிரிந்து விட்டது. இந்நிலையில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை என்றும் பேசக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறேன். சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்க என வெங்கல் ராவ் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இவருக்காவது வடிவேலு உதவி செய்வாரா? என தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். சக நடிகர்களுக்கு உதவி செய்யாமல் கோடிக் கணக்கில் சொத்து சேர்த்து வைத்து என்ன பண்ணப் போறீங்க என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்: ஸ்டண்ட் மேனாக இருந்த வெங்கல் ராவ் சண்டைக் காட்சியின் போது காயம் ஏற்பட்ட நிலையில், இனிமேல் ஸ்டண்ட் வேண்டாம் நடிகராக மாறிவிடலாம் என நினைத்த அவர் 1995ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் பிரபு நடித்த கட்டுமரக்காரன் படத்தில் நடிகராக மாறினார். அதன் பின்னர் வடிவேலு ட்ரூப்பில் இணைந்த அவர் அவருடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கடைசியாக வடிவேலு மீண்டும் நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் வெங்கல் ராவுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
கை கால் செயலிழந்து விட்டது: ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் கடந்த 2022ம் ஆண்டு அவதிப்பட்ட வெங்கல் ராவ் உதவி கோரியிருந்தார். இந்நிலையில், தற்போது தனக்கு ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்து விட்டதாக கலங்கிய கண்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு சினிமா பிரபலங்களிடம் உதவி செய்யுங்க, மருந்து வாங்க கூட காசு இல்லை என மன்றாடியுள்ளார்.
உதவி செய்வாரா வடிவேலு?: தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு பல கோடி ரூபாய் சொத்துக்களுடன் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால், அவருடன் உடன் இணைந்து நடித்த காமெடி நடிகர்கள் பலரும் கஷ்டப்படும் சூழ்நிலையிலேயே உள்ளனர். உடல் நலக்குறைவு காரணமாக வெங்கல் ராவ் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், இவருக்காவது வடிவேலு உதவி செய்வாரா? என ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
போண்டா மணிக்கு உதவல: வடிவேலுவுடன் பல படங்களில் துணை காமெடியனாக நடித்து வந்த போண்டா மணி கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி காலமானார். பல முறை வடிவேலு அவருக்கு உதவுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில், கடைசி வரை போண்டா மணிக்கு வடிவேலு உதவவே இல்லை என்றனர். வெங்கல் ராவுக்காவது வடிவேலு உதவி செய்ய வேண்டும் என்றும் சினிமாவில் நலிந்த கலைஞர்களை காப்பாற்ற நடிகர் சங்கம் எந்தவொரு முயற்சியும் செய்யவில்லையா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











