Blue Sattai Maran: "மூதாட்டிக்கு தொந்தரவு... ரஜினி பண்றதெல்லாம் சரியா..?” விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இன்று தனது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடினார். அப்போது அவரை பார்க்க வந்த ரசிகர்களுக்கு வீட்டு வாசலில் நின்று பொங்கல் வாழ்த்துக் கூறினார். இதனால் தனக்கு தொந்தரவாக இருப்பதாக ரஜினியின் பக்கத்து வீட்டு மூதாட்டி ஆவேசமாக தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இதனையடுத்து ப்ளூ சட்டை மாறனும் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஜினி பண்றதெல்லாம் சரியா
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாக வேட்டையன் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடினார் சூப்பர் ஸ்டார்.

இதனிடையே பொங்கலை முன்னிட்டு அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். வழக்கமாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் ரஜினியிடம் வாழ்த்துப் பெற ரசிகர்கள் கூடுவது வழக்கம். அதேபோல் இன்றும் அதிகமான ரசிகர்கள் அங்கு சென்றிருந்தனர். இதனையடுத்து ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், "அனைவரும் ஆரோக்கியம், மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும் சிந்தனையிலும் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்" என வாழ்த்தியிருந்தார்.

ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் ரஜினியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் ஆத்திரம் அடைந்தார். "நல்ல நாளில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஒவ்வொரு பண்டிகைக்கும் வீட்டின் முன் அதிக சத்தம் கேட்கிறது. வீட்டுக்கு முன்னாடி வந்து நின்று கூச்சலிடுவதா... நாங்களும் தான் டேக்ஸ் கட்டுறோம்... இதே ஏரியாவில் காலங்காலமாக குடியிருக்கோம்... எங்களுக்கெல்லாம் எந்த ஸ்பெஷலும் கிடையாது. இங்களுக்கு மட்டும் என்ன இருக்கு... ரசிகர்கள் இங்கே வருவது தொல்லையாக உள்ளதாக" ஆட்சேபனை தெரிவித்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ப்ளூ சட்டை மாறனும் ரஜினியை விமர்சித்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "ரஜினி பிறந்தநாள், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என அடிக்கடி போயஸ் கார்டன் வந்து கோஷம் போடும் ரசிகர்கள். பக்கத்துவீட்டு பெண்மணி ஆவேசம். ரசிகர்களை தனது கல்யாண மண்டபத்தினுள் அல்லது வேறேதேனும் தனிப்பட்ட இடத்தில் சந்திக்காமல்.. இப்படி சுற்றி உள்ள வீட்டாரை தொந்தரவு செய்வது ரஜினிக்கு சரியா?" என பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து ப்ளூ சட்டை மாறன் டிவிட்டர் பதிவுக்கு ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். சிலர் ப்ளூ சட்டை மாறனை ஒருமையில் திட்டியும் கமெண்ட்ஸ் செய்வதால் ப்ளூ சட்டை மாறனின் டிவிட்டர் பக்கத்தில் களேபரமாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











