Blue Sattai Maran: "தமிழர்கள் பிச்சை எடுப்பவர்கள்..” ஐஸ்வர்யா ரஜினியிடம் நியாயம் கேட்ட ப்ளூ சட்டை!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் பிப்.9ம் தேதி வெளியாகிறது. ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா தயாரித்துள்ளது. இந்நிலையில், லால் சலாம் படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் நடித்துள்ளது குறித்து ஐஸ்வர்யா ரஜினியிடம் ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதெல்லாம் நியாயமா ஐஸ்வர்யா
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடித்துள்ள இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோல் செய்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம், கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து மத அரசியலை விமர்சிக்கும் கதைக்களம் என சொல்லப்படுகிறது.

இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்னர் லால் சலாம் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய ஐஸ்வர்யா, "என் அப்பா ரஜினிகாந்த் சங்கி இல்லை" என ஆவேசமாக பேசியிருந்தார். எல்லோரும் அவரை சங்கி என சொல்வதை பார்த்து என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ரஜினிகாந்த் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என்றெல்லாம் பேசியிருந்தார்.
இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினியிடமும் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது லால் சலாம் படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் தான்யா பாலகிருஷ்ணன். பெங்களூரைச் சேர்ந்த இவர் ஏற்கனவே தமிழர்களை பிச்சைகாரர்கள் என பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்த நிலையில் இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டேன் என சத்தியம் செய்திருந்தார்.
ஆனால் தற்போது லால் சலாம் படத்தில் தான்யாவை நாயகியாக நடிக்க வைத்தது நியாயம் தானா என ஐஸ்வர்யா ரஜினியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதாவது, "லால் சலாம் - நடிகர்களின் பின்னணி" என்ற கேப்ஷனில், "தான்யா பாலகிருஷ்ணன் பெங்களூரில் வசிப்பவர். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற சில தமிழ்ப் படங்களில் நடித்தார். வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார்."
"சில வருடங்களுக்கு முன்பு CSK vs RCB அணிகளுக்கு இடையே நடந்த IPL போட்டி பற்றி இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அது இதுதான்: தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால்.... தருகிறோம். இவருக்கு எதிராக HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனதால், கடுப்பான இவர் 'இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்' என சபதம் போட்டார்."
"சரி இப்போது இதை சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறீர்களா? லால் சலாம் படத்தின் கதாநாயகியே இவர்தான். எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தலீவரை சங்கி இல்லையென்று கூறிய ஐஸ்வர்யா... இதற்கு என்ன பதில் கூறுவார்? சினிமா ரசிகர்களே... உங்கள் வேலை... இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது மட்டுமே. மற்றபடி வேறு எந்த கேள்வியும் கேட்காதீர்கள். எஞ்சாய்" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











