Blue Sattai Maran: "விஜயகாந்த் நினைவிடம் போகாம பாட்டுப் பாடி பெர்ஃபார்மா” தனுஷை விளாசிய ப்ளூ சட்டை
சென்னை: கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் விஜயகாந்தின் பாடலை பாடி அவருக்கு இரங்கல் தெரிவித்தார் தனுஷ். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்துக்கும் செல்லாமல், அவரது நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தாத தனுஷை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக ட்ரோல் செய்துள்ளார்.
தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ம் தேதி வெளியாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் இரு தினங்களுக்கு முன்னர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தனுஷ் தனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் கலந்துகொண்டனர். மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், ஜிவி பிரகாஷ், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் கடந்த வாரம் உயிரிழந்த விஜயகாந்துக்கு படக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தனுஷ் மேடையில் பேசிய போது, விஜயகாந்தின் பாடலை பாடி அவருக்கு இரங்கல் தெரிவித்தார். ”கண்ணுக்கொரு வண்ணக்கிளி... காதுக்கொரு கானக் குயில்... நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நீதானய்யா..” என தனுஷ் பாடியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. விஜயகாந்த் மறைவுக்கு தனுஷ் இறுதி அஞ்சலி செலுத்தாதது கடும் சர்ச்சையானது. தனுஷின் அக்காவுக்கு மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த்.
இந்த சம்பவம் பற்றி தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா பல பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் தனுஷ் விஜயகாந்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாது விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில், கேப்டன் மில்லர் மேடையில் விஜயகாந்த் பாடலை பாடி தனுஷ் அஞ்சலி செலுத்தியதையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதுபற்றி ப்ளூ சட்டை மாறனும் ட்வீட் போட்டுள்ளார்.
அதில், ”உங்க பட ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்த இடத்துல இருந்து அதிகபட்சம் அரைமணி நேரம் ஆகுமா கேப்டனின் நினைவிடம் இருக்கும் இடம்? அதைவிட்டுட்டு இங்க பாட்டு பாடி பெர்ஃபாம் பண்றீங்க? அருமை கேப்டன் மில்லர் ஐயா. அருமை” என ட்ரோல் செய்துள்ளார். நேரு ஸ்டேடியத்தில் இருந்து மிக அருகிலேயே கேப்டனின் நினைவிடம் உள்ளது. அப்படியிருக்க நினைவிடம் கூட செல்ல முடியாத அளவுக்கு தனுஷ் பெரிய ஆளாகிவிட்டாரா என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











