Blue Sattai Maran - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏன் முரட்டு முட்டு கொடுக்கிறீர்கள்.. ப்ளூ சட்டை மாறன் அதிரடி ட்வீட்
சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதற்காக முரட்டு முட்டு கொடுக்கிறீர்கள் என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் அடியெடுத்து வைத்து 30 வருடங்கள் நிறைவடைந்திருப்பதால் மறக்குமா நெஞ்சம் என்ற கான்செர்ட் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. அதற்கான டிக்கெட் விற்பனைகளும் ஜோராக நடந்து முடிந்தது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை ஏசிடிசி ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கவனித்தது

நிகழ்ச்சி ஒத்தி வைப்பு: ஆனால் அன்று சென்னையில் கடுமையான மழை பெய்தது. இதனால் செப்டம்பர் 10ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்று முன் தினம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்கனவே ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிக்கு வாங்கிய டிக்கெட்டுகள் இதற்கும் செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய டிக்கெட்டுகளும் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சர்ச்சை: இதனால் 25,000 பேர்வரை கான்செர்ட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50,000 பேர்வரை குழுமிவிட்டார்கள் . இதன் காரணமாக பல ரசிகர்கள் நிகழ்ச்சி நடந்த மைதானத்துக்குள்ளேயே போக முடியாமல் திணறினர். அதேபோல் வாகனங்களில் வந்தவர்கள் பார்க்கிங் வசதி இல்லாமல் திண்டாடினர். கூட்டம் அளவுக்கதிகமாக வந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு சிலரோ டிக்கெட்டை கிழித்தும் போட்டனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்: இந்த விவகாரம் குறித்து அமைதி காத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் டிக்கெட்டுகளுக்கான பணம் திருப்பி கொடுக்கப்படும் என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானே பலி ஆடு ஆகிறேன் என கூறியிருந்தார். இதனையடுத்து ரஹ்மானின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று பலரும் பேசினர்.
சப்போர்ட்: சூழல் இப்படி இருக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் கார்த்தி, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக பேசியிருந்தனர். அதேபோல் இயக்குநர் தங்கர்பச்சான் தனது எக்ஸ் தளத்தில், "ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள் பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும்.
இத்தகைய அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவானால் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை! இது போன்ற நிகழ்வுகளை மட்டும் பணமாக்க நினைக்கும் ஊடகங்கள் மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி விடுகின்றன. மக்களும் பொது நல சிந்தனையின்றி கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுகின்றனர். மக்களும் ஊடகங்களும் மனது வைத்தால் மட்டுமே அனைத்து மாற்றங்களும் நிகழும்! அதுவரை வெறும் புலம்பலிலேயே மக்கள் வாழ்வு முடிந்து போகும்!" என தெரிவித்திருந்தார்.
ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த ட்வீட்டை பகிர்ந்து, "மறக்குமா நெஞ்சம்' கொடுமைகள் பற்றி பல்வேறு வீடியோக்கள் ஆதாரத்துடன் வெளிவந்தன. பெண்கள், முதியவர்கள் உட்பட பலரும் தாங்கள் கடும் இன்னலுக்கு ஆளானதை கூறினர். ஆனால் திரைத்துறையை சார்ந்த சிலர் அதைப்பற்றி பேசாமல் ரஹ்மானுக்கு கூஜா தூக்குகிறார்கள். இதை அவரே விரும்ப மாட்டார். தவறுக்கு தானும் பொறுப்பென நேற்றே கூறிவிட்டார். நீங்கள் ஏன் முரட்டு முட்டு தருகிறீர்கள்?
நீங்கள் எத்தனை போராட்டம்: இப்படி பேசினால்.. அவர் உங்கள் படத்தில் இசையமைப்பார் என ஏதேனும் கணக்கு போடுகிறீர்களா? ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றது அமேசான் வாழ் அரிய வகை மக்களா அல்லது நிலாவில் வாழும் குடிமக்களா? தமிழர்கள்தானே? நீங்கள் மக்களுக்காக எத்தனை போராட்டங்கள் நடத்தி.. தீர்வினை பெற்று தந்துள்ளீர்கள்? பெரும்பாலும் ஏசி அறையில்.. மைக் முன்பு பொங்குவதோடு சரி.
இதனால்தான் பல ஆண்டுகளாக உங்கள் படங்கள் அனைத்தையும் மக்கள் புறக்கணித்து வருகிறார்கள் போல. உங்கள் வீராவேச உபதேசங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசாதவர்களின் படங்களை பார்க்காமல் ஒதுக்கித்தள்ளுங்கள் மக்களே" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











