Blue Sattai Maran: "விஜய்க்கு நான் சொம்பு அடிக்கிறேனா..?” பிரபலத்தை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தமிழ் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் சினிமா விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.
ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இந்நிலையில், ஜெயிலர் பட விமர்சனத்துக்காக ப்ளூ சட்டை மாறனை விமர்சித்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ப்ளூ சட்டை மாறன், 'தான் விஜய்க்கு சொம்பு அடிப்பதில்லை' என காட்டமாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு சொம்பு அடிப்பதில்லை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனிலும் சம்பவம் செய்து வரும் ஜெயிலர் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவாக விமர்சனம் செய்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்தும் தொடர்ச்சியாக ட்ரோல் செய்துகொண்டே வருகிறார்.
ஆனால், இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ள சினிமா விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், வாரிசு, துணிவு, விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களின் வசூலை ஜெயிலர் முறியடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும், ப்ளூ சட்டை மாறன் குறித்தும் விமர்சனம் செய்துள்ளதாக தெரிகிறது. அதாவது "ப்ளூ சட்டையை மக்கள் அவாய்ட் பண்ணி விடுவார்கள்" என திருப்பூர் சுப்ரமணியம் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜெயிலர் படம் குறித்த நெகட்டிவான விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் ட்ரோல்கள் காரணமாக ப்ளூ சட்டை மாறனை திருப்பூர் சுப்ரமணியம் விமர்சித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் மிக காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். "அதை காலம் தீர்மானிக்கட்டும் ஐயா. அவாய்ட் செய்தாலும் இந்த பூமியில் வாழத்தான் போகிறேன். அதேநேரம் நீங்கள் எப்பேர்ப்பட்ட நல்லவர் என்பதையும் இனி அவ்வப்போது மக்களுக்கு தெரிவிக்கவும் விழைந்துள்ளேன். அதில் முதலாவது இதுதான். நியாயமான பதில் இருந்தால் கூறுங்கள். அந்த பதில் ஏற்புடையதா என்று மக்கள் தீர்மானிக்கட்டும்" என பல கேள்விகளை முன் வைத்துள்ளார்.
"கொரோனா நேரத்தில் மாஸ்டர் படம் வெளியானது. அப்போது 50% பேர் மட்டுமே தியேட்டரில் அனுமதி என்று அரசாங்கம் ஆணையிட்டு இருந்தது. ஆனால் உங்கள் தியேட்டரில் ஒரு காட்சிக்கு 100% டிக்கட் விற்றீர்களா? அதாவது 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் ஒவ்வொருவரும் நிர்ணயித்த டிக்கட்டின் விலையை விட இரண்டு மடங்கு பணம் தந்து வாங்கினார்களா?. இது பற்றி உங்களிடம் யூ ட்யூப் மற்றும் செய்தி சேனல்கள் கேள்வி கேட்டன. அதற்கு நீங்கள் சொன்ன பதில்.
பக்கத்துக்கு சீட்டில் ஹாண்ட்பேக் உள்ளிட்ட பொருட்களை படம் காண்பவர்கள் வைத்துக்கொள்ளலாம். அதனால்தான் இருமடங்கு விலையில் டிக்கட் விற்கிறோம்" என கூறியதை நினைவுப்படுத்தியுள்ளார்.
மேலும், "1. இது நீங்கள் கூறியதுதானா அல்லது உங்களைப்போன்ற உருவத்தில் வேறு யாரோ கூறியதா அல்லது உங்கள் குரலை மாற்றி எடிட் செய்து வெளியிட்டார்களா?
2. அரசாங்கம் அனுமதித்ததை விட இருமடங்கு விலைக்கு டிக்கட் விற்றது சட்டப்படி குற்றமா இல்லையா?
3. ஹாண்ட்பேக் உள்ளிட்ட உடமைகளை வெளியே செக் செய்து அனுப்புவது அல்லது அதற்கென உள்ள அலமாரியில் வைப்பதுதானே நியாயம்? இது என்ன உலகில் இல்லாத அதிசயமாக.. அவற்றை வைக்க தனியே ஒரு சீட்டை தியேட்டருக்குள் ஒதுக்கி, அதற்கும் இன்னொரு டிக்கட்டை விற்க வேண்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "செய்தி அல்லது யூட்யூப் சேனல்களுக்கு தைரியம் இருந்தால் இக்கேள்விகளை அவரிடம் எழுப்பி 'நியாயமான' பதிலை வீடியோ பேட்டி மூலம் பெற்றுத்தாருங்கள். உண்மையை சொல்கிறாரா அல்லது மழுப்புகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லுங்கள் ஐயா. காலம் யாரை ஒதுக்கி தள்ளும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். என் விமர்சனம் உண்டு. நான் உண்டு என்றுதான் இருந்தேன். என் பட ரிலீஸ் சமயம் தவிர்த்து... இதுவரை எங்குமே பேட்டி தந்ததில்லை. உங்களையும், தற்போது யூ ட்யூபில் கூசாமல் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் சீனியர் பத்திரிகையாளர்களையும் பற்றி நான் பேசியதும் இல்லை."
"அதேபோல போலி வசூல் நிலவரம் சொல்லும் Social Media Trackers குறித்தும் நான் பேசியதில்லை. ஆனால் நீங்கள் எல்லோரும் மாஸ் ஹீரோக்களுக்கு வரிந்து கட்டிக்கொண்டு, அவர்களை குளிர்விக்க உங்கள் பேட்டிகள் மற்றும் ட்வீட்களில் தொடர்ந்து என் பெயரை பயன்படுத்தி வன்மத்தை கக்கி வருகிறீர்கள். உங்கள் வசதி, புகழை ஒப்பிட்டால் நானெல்லாம் ஆளே இல்லை. கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். இருக்கட்டும். நடப்பது அனைத்தும் நன்மைக்கே."
"ஆகவே.. வேறு வழியின்றி இன்றுமுதல் இப்படிப்பட்ட பெரியவர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இனி அவ்வப்போது உங்களை போன்றோர் பேசிய வீடியோ ஆதாரங்களை வைத்தே ட்வீட்களை போடுகிறேன். எது உண்மை என்பதை மக்களின் பார்வைகளையே விட்டு விடுகிறேன். நீ விஜய் சொம்பு என்று மொக்கை போடுவோர் கவனத்திற்கு... எனது பிகில், பீஸ்ட், வாரிசு விமர்சனங்களை பார்க்கவும். மீண்டும் சொல்கிறேன். தர்பார், அண்ணாத்த, ஜெயிலர் படங்கள் எனக்கு பிடிக்கவில்லை."
"ஆகவே.. நீங்கள் வேண்டுமானால் ஜெயிலருக்கு சொம்படித்து விட்டு போங்கள். ஆனால் அதை பிடிக்கவில்லை என்று கூறும் உரிமை மற்றவர்களுக்கு உண்டு. தொடர்ந்து வடைகளை சுடுங்கள். ஒருவாரமாவது வேடிக்கை பார்க்கிறோம். அதன்பிறகு ஒவ்வொரு வடையும் உருவான விதம் பற்றி விவரிக்கிறேன். The Game begins now. Ultimate truth vs Shameless lies" என பதிவிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











