பவன் கல்யாணின் போஸ்ட்க்கு கமெண்ட் செய்த சூர்யா - கார்த்தி.. ஒன்றும் சொல்வதற்கில்லை.. பிரபலம் அப்செட்
சென்னை: நடிகர் கார்த்தி, திருப்பதி லட்டு குறித்து பேசியது குறித்து நடிகரும் ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், நடிகர் கார்த்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். அதன் பின்னர், நடிகர் கார்த்தி நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் பிரகாஷ் ராஜ் மற்றும் பவன் கல்யாணுக்கு இடையில் பெரும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்தியின் மன்னிப்புக்கு, பவன் கல்யாண் பதில் அளித்தார். பவன் கல்யாணின் போஸ்ட்டுக்கு சூர்யாவும் கார்த்தியும் கமெண்ட் செய்தது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் கார்த்தியின் 27வது படமாக உருவான மெய்யழகன் படத்தை, 96 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரேம் குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான இப்படம் வரும் வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 27ந் தேதி வெளியாக உள்ளது.படம் வெளியாக இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் படத்திற்கான ப்ரோமோசன் வேலைகள் நாலாபுறமும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. மெய்யழகன் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியாக உள்ளது. தெலுங்கில் இப்படம் 'சத்யம் சுந்தரம்' என பெயரில் வெளியாகவுள்ளது

இதையடுத்து, படத்திற்கான ப்ரோமோசன் ஹைதராபாத்தில் நேற்று அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. இதில், நடிகர் கார்த்தி, இயக்குநர் பிரேம் குமார் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில், தொகுப்பாளினி கார்த்தியிடம் 'உங்களுக்கு லட்டு வேணுமா?' என்று கேட்க, அதற்கு கார்த்தி இப்போது லட்டு குறித்து பேச வேண்டாம், அது சென்சிட்டிவான விஷயம். எனவே லட்டு தொடர்பாக இப்போது பேச வேண்டாம் எனக் கூறினார். கார்த்தியின் பதிலைக் கேட்டு அரங்கில் இருந்த பலர்,கைத்தட்டி சிரித்தனர். நடிகர் கார்த்தியின் பேச்சை கண்டித்த ஆந்திர துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண், "சினிமா நிகழ்வில் லட்டு வைத்து கிண்டலடித்து பேசுகிறார்கள். மேலும் லட்டு சென்சிடிவ்வான விஷயம் எனவும் சொல்லுகின்றார்கள். எங்கள் நம்பிக்கையை ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள், நடிகர்களுக்கு மரியாதை கொடுக்கிறேன். அதேநேரத்தில் , சனாதான தர்மம் என வரும் போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்துத் பேச வேண்டும் என மிகவும் காட்டமாக கண்டித்திருந்தார்.
கார்த்தி: பவன் கல்யாணின் ரியாக்ஷன் மிகவும் காட்டமாக இருந்ததால், நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கேட்டார். அதாவது, ”பவன்கல்யாண் சார், உங்கள் மீது எனக்கு எப்போதும் மிகப்பெரிய மரியாதை உள்ளது. நான் பேசியது எதிர்பாராதவிதமாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை எப்போதும் பின்பற்றுகிறேன்” என்று பதிவிட்டு, தனது மன்னிப்பினைத் தெரிவித்தார்.
பவன் கல்யாண்: இந்நிலையில் கார்த்தியின் மன்னிப்புக்கு பவன் கல்யாண் பதில் அளித்துள்ளார். அதில், ”அன்பிற்குரிய கார்த்தி, உங்கள் ரியாக்ஷன் மற்றும் விரைவான பதிலை நான் மதிக்கின்றேன். அதேநேரத்தில் உங்கள் பதில் மூலம் நமது மரபுகளுக்கு நீங்கள் காட்டும் மரியாதையையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். திருப்பதி மற்றும் அதன் மதிப்பிற்குரிய லட்டுகள் போன்ற நமது புனிதமான விஷயங்கள் என்பது மில்லியன் கணக்கான பக்தர்களுக்கு உணர்ச்சிகரமானது.
வாழ்த்து: அதேநேரத்தில் இதுபோன்ற தலைப்புகளை நாம் அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம். எந்த நோக்கமும் இல்லாமல் இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். பொது நபர்களாகிய நமது பொறுப்பு என்பது நாம் மிகவும் மதிக்கும் நமது கலாச்சாரம், ஆன்மீக விழுமியங்கள், ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்ப்பதாகும். சினிமா மூலம் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க அதே நேரத்தில் நமது விழுமியங்களை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம். அர்ப்பணிப்பும் திறமையும் கொண்டு நம் சினிமாவை வளப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக உங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் உங்களது அண்ணன் சூர்யாவுக்கும் அவரது மனைவி ஜோதிகாவுக்கும் மெய்யழகன் படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
ப்ளூ சட்டை மாறன்: பவன் கல்யாணின் இந்த போஸ்ட்டுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி என இருவரும் ” உங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றிகள் சார்” என கமெண்ட் செய்துள்ளனர். இந்தப் பதிவைப் பார்த்த பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், பவன் கல்யாண் போஸ்ட்டைப் பகிர்ந்து, கமெண்ட்டில் சூர்யாவும் கார்த்தியும் நன்றி தெரிவித்துள்ளார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை என பதிவிட்டுள்ளார். மேலும் இணையவாசிகள் சிலர் ’சூர்யாவும் கார்த்தியும் இப்படி சாஸ்டாங்கமா காலில் விழுந்துட்டாங்களே’ என கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











