அஜித்தின் விடாமுயற்சி.. மொக்கை மொக்கை சீன்கள்.. மொத்தமாக முடித்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்
சென்னை: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தார்கள். அதேபோல் இது அஜித் படம் மாதிரி இல்லையே என்று ஏகே ரசிகர்களே நொந்துகொண்டார்கள். இந்தச் சூழலில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விடாமுயற்சி படத்துக்கு தன்னுடைய விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.
கௌதம் மேனன், செல்வராகவன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநராக இருக்கிறார். இதன் காரணமாக அஜித்தை அவர் இயக்கப்போகிறார் என்கிற அறிவிப்பு வந்தவுடன் இயல்பாகவே விடாமுயற்சி படத்தின் மீது பலரது கவனமும் இருந்தது. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.

நேற்று ரிலீஸ்: படமானது முதலில் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் திடீரென பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்தார்கள். அதன்படி நேற்று இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து அஜித் நடித்திருக்கும் திரைப்படம் வெளியாவதால் ஏகே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள். கட் அவுட்டுகள் வைத்தது; அதற்கு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் என தேவையில்லாத கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டார்கள்.
பிரேக் டவுன் டூ விடாமுயற்சி: படத்தின் டீசர் வெளியானபோதே இது பிரேக் டவுன் படத்தின் தழுவல்தான் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய மகிழ், 'இந்தப் படத்தின் மூல கதை என்னுடையது இல்லை.. திரைக்கதையில் எனது பங்களிப்பு இருக்கிறது' என்றும்; மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படத்துக்கு வர வேண்டாம் என்றும் தெளிவாக சொல்லிவிட்டார். இதனைப் பார்த்தபோதே அஜித் ரசிகர்களுக்கு லேசாக ஜெர்க் அடித்தது என்பதுதான் உண்மை.
எப்படி இருக்கு படம்?: படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தார்கள். வழக்கமான அஜித் படம் மாதிரி இது இல்லை; முதல் பாதிகூட ஓகேதான். ஆனால் இரண்டாவது பாதி பயங்கரமாக சொதப்பிவிட்டது.. திரைக்கதை ரொம்பவே தட்டையாக இருக்கிறது என்று ஓபனாக பேசினார்கள். அதேசமயம் படத்தை அஜித்தும், திரிஷாவும்தான் தாங்கியிருக்கிறார்கள் என்றும் பாராட்டினார்கள். இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "பிரேக் டவுன் படத்தை இந்தியனைஸ் செய்கிறேன் என்று விடாமுயற்சி படத்தை எடுத்து வைத்திருந்தார்கள். அந்தப் படம் 1.30 மணி நேரம்தான் ஓடும். ஆனால் இந்தப் படமோ 2.30 நேரம் ஓடும் என்று சொன்னபோதே கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. பொதுவாக ஒரு நாட்டில் படம் எடுக்க சென்றால் அதன் மூலம் தங்களது நாட்டின் சுற்றுலா வளம் மேம்படும் என்று அந்தப் படக்குழுவுக்கு அந்த நாட்டு அரசாங்கம் சலுகைகள் தரும். இவர்கள் அஜர்பைஜானில் படம் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை யாராவது பார்த்தால் அய்யோ அஜர்பைஜான் சென்றால் கிட்னி எல்லாம் உருவிடுவாங்களோ என்றுதான் தோன்றும்.
மொக்கை மொக்கை சீன்கள்: முதல் பாதிகூட நன்றாகத்தான் இருந்தது. இந்தியாவுக்கு தகுந்த மாதிரி மாற்றியிருந்தார்கள். ஆனால் இரண்டாம் பாதியெல்லாம் சுத்தமாக சரியில்லை. மொக்கை மொக்கை சீன்களாக இருக்கின்றன. வில்லன், வில்லிக்கு எதற்காக பிளாஷ்பேக் என்றே தெரியவில்லை. தாத்தா, பாட்டியுடன் எதற்காக சண்டை என்பதும் புரியவில்லை. ஹீரோவைவிட வில்லன்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அதேசமயம் ஆட்களை கடத்தி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விற்றுவிடுவதாக வில்லன் க்ரூப்பை காண்பிக்கிறார்கள். எனக்கு தெரிந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதே நல்ல தொழில்தான். அவர்கள் உண்மையாகவே புத்திசாலியாக இருந்தால் அந்தத் தொழிலையே செய்திருக்கலாம்.
அஜித்தை மூன்று காலங்களில் காண்பிக்கிறார்கள். அது குழப்பத்தைத்தான் கொடுத்தது. மேலும் அவரை சில கெட்டப்புகளில் ரசிகர்களுக்கு காண்பிக்க மட்டுமே யூஸ் ஆகியிருக்கிறது. கதைக்கு பயன்படவே இல்லை. பொதுவாக அஜித் கோட் ஷூட், கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு ஹை ஸ்பீடில் நடந்து வந்தாலே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அப்படிப்பட்ட விஷயம்கூட இந்தப் படத்தில் இல்லை. இரண்டாம் பாதியில் திரைக்கதையையும், மாஸான நான்கு சீன்கள் என இன்னும் கொஞ்சம் வைத்திருந்தால் படம் தப்பியிருக்கும். மொத்தமாக சொல்ல வேண்டுமென்றால் தட்டினால் திறக்கும் கதவை இவர்களே உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











