Vijayakanth - அவருக்கு மட்டும் என்ன 2 உயிரா இருக்கு.. ஒரே கேள்வியால் ஒட்டுமொத்தமாக ஆஃப் செய்த விஜயகாந்த்
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு தேமுதிக கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் நடந்து அங்கேயே முழு அரசு மரியாதையுடன் உடலும் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளம் திரண்டிருக்கிறது. இறுதியாக விஜயகாந்த்தை பார்ப்பதற்கும் பலரும் சென்னைக்கு படையெடுத்திருந்தனர்.
கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கபட்டு வந்த விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 2023ஆம் ஆண்டு முடிய இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் சூழலில் இந்த வருடத்தின் மிகப்பெரிய இழப்பாக விஜயகாந்த் உயிரிழந்ததை மக்கள் கருதுகிறார்கள். அவருக்கு நுரையீரல் அழற்சி காரணமாகத்தான் உயிர் பிரிந்ததாக மருத்துவமனையும் அறிவித்துவிட்டது.

இறுதிச்சடங்கு: தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் உடல் அங்கிருந்து கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு முழு அரசு மரியாதையுடன் அங்கேயே அடக்கமும் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு விஜயகாந்த்தின் குடும்பத்தினர் உட்பட 200 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
மறையாத விஜயகாந்த்: அவரது உயிர் பிரிந்தாலும் அவர் செய்த உதவியிலும், அவர் நடித்த படங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். விஜயகாந்த் போல் ஒரு ஆக்ஷன் ஹீரோ இனியும் கிடைக்கப்போவதில்லை என்பதை உறுதியாக சொல்லலாம். ஏனெனில் அவர் அளவுக்கு சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுக்க நடிகர்கள் தயங்குவார்கள். பெரும்பாலும் டூப் போட்டுத்தான் நடிப்பார்கள். ஆனால் விஜயகாந்த்தோ அப்படி இல்லை. தான் நடிப்பது எவ்வளவு ரிஸ்க்கான சண்டை காட்சியாக இருந்தாலும் அவரேதான் நடிப்பார். சேதுபதி ஐபிஎஸ் உள்ளிட்ட படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்த சூழலில் விஜயகாந்த் எதற்காக டூப் போட மறுத்தார் என்பது குறித்து திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய பதிவில், "நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது அவரது சண்டைக்காட்சிகளே. பல திரைப்படங்களில் தனக்கு டூப் வேண்டாம் என மறுத்து, சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் தனெக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தார் விஜயகாந்த்.
சம்பவம்: இதற்கு பின்னால் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 'நாளை உனது நாள்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், அவருக்கு டூப் போட்ட ஒரு ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு, இனிமேல் எனக்கான சண்டைக்காட்சிகளில் நானே நடித்துக் கொள்கிறேன், டூப் வேண்டாமென முடிவெடுத்துள்ளார்.
ஒரு உசுருதானே: டூப்புக்கு ரெண்டு உசுரா இருக்கு, அவருக்கு ஒரு உசுருதானே. அது போறதா இருந்தால் என்னோடு போகட்டும், நானே ரிஸ்க் எடுக்கிறேன் என தெரிவித்தாராம். இதற்காக பிரத்யேக சண்டைப் பயிற்சிகளையும் அவர் எடுத்துள்ளார். தனது பெரும்பாலான படங்களில் டூப் போடாமல் நடித்ததால், பலமுறை இவருக்கு தோள்பட்டை இறக்கம் ஏற்பட்டுள்ளது" என முகநூலிலிருந்து ஒருவரது பதிவை பகிர்ந்திருக்கிறார்.
மேலும், பெரிய மருது படத்தில் பொன்னம்பலத்துடன் விஜயகாந்த் மோதும் அசல் சண்டைக்காட்சி. தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த பொன்னம்பலத்தால் வர இயலவில்லை. தனக்கு பல வாய்ப்புகள் அளித்த கேப்டனின் மறைவு செய்தி கேட்டு பொன்னம்பலம் மிகவும் அழுததாக செய்தி என்று கூறி அந்த சண்டை காட்சி வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











