Vijayakanth - விஜயகாந்த் சமாதியில் பெர்ஃபார்மா பண்ணுறீங்க.. இந்தாங்க வாங்கிக்கங்க.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கும் சூழலில் அவரது நினைவிடத்துக்கு வந்து நடிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த நிலையில் அவர்களை விமர்சிக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. கார்த்தி, சிவகுமார், அருண் விஜய் உள்ளிட்டோர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவருக்கு அரசியல் ரீதியாக சில துரோகங்கள் நடந்தன. அது விஜயகாந்த்துக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் உடல்நிலையும் சரியில்லாமல் போனது. இதனால் அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அங்கிருந்து தமிழ்நாடு திரும்பியவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வாக வீட்டில் இருந்தார். அவ்வப்போது தொண்டர்களை மட்டும் சந்தித்துவந்தார்.

உடல்நலக்குறைவு: ஆனால் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வைத்து அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பலரும் தங்களது பெரும் இரங்கலை தெரிவித்தனர். தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் சென்னைக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிரபலங்கள் அஞ்சலி: விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திரையுலக பிரபலங்களில் விஜய் முதல் இளையராஜாவரை பலரும் நேரில் சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அவர் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டனர். விஜய்யோ கண்ணீரே விட்டுவிட்டார். ஆனால் அஜித், சூர்யா, வடிவேலு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வரவில்லை.
கண்டனம்: முக்கியமாக சூர்யா, வடிவேலு ஆகியோருக்கு சினிமாவில் விஜயகாந்த் பீக்கில் இருந்தபோது உதவியிருக்கிறார். அதேபோல் தனுஷின் அக்காவுக்கு மெடிக்கல் சீட் விஜயகாந்த் உதவி செய்ததால்தான் கிடைத்தது. ஆனால் அந்த மூன்று பேரும் விஜயகாந்த் உயிரிழப்புக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. மாறாக சூர்யா இரங்கல் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டார். தனுஷோ கேப்டன் மில்லர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜயகாந்த்தை நினைவுகூர்ந்தார். வடிவேலுவோ நேரிலும் வரவில்லை. இரங்கலும் தெரிவிக்கவில்லை.
சமாதிக்கு வந்த நடிகர்கள்: சூர்யா, தனுஷ், வடிவேலுவுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் சூர்யா வெளிநாட்டிலிருந்து நேற்றுதான் இந்தியா வந்தார். இதற்கிடையே சிவகுமார், கார்த்தி, அருண் விஜய் உள்ளிட்டோர் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருக்கும் விஜயகாந்த்தின் நினைவிடத்துக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பின் பேசிய சிவகுமார், விஜயகாந்த் முதலமைச்சராகி இருக்கக்கூடியவர் என்றார். அதேபோல் கார்த்தி பேசுகையில், விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என்று உருகினார். வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியிருக்கும் சூர்யா எப்போது விஜயகாந்த் நினைவிடத்துக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ப்ளூ சட்டை மாறன் விளாசல்: நடிகர்கள் இப்போது விஜயகாந்த் நினைவிடத்துக்கு படை எடுக்க ஆரம்பித்தாலும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத அளவுக்கு அப்படி என்ன பிஸியாக இருந்தார்கள் என்ற விமர்சனமும் எழத்தான் செய்திருக்கிறது. இந்நிலையில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நடிகர்களை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருக்கிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவரோட சமாதில வந்து சாவகாசமா பெர்ஃபார்ம் பண்ற நடிப்பை ஊர் நம்பாதுடா. அடுத்து எவன் வர்றான்னு பாப்போம்” என பதிவிட்டிருக்கிறார். விஜயகாந்த்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத பிரபலங்களை தொடர்ந்து விமர்சித்துவருகிறார் ப்ளூ சட்டை. முக்கியமாக அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











