கோட் படத்துக்கு திடீரென குறைந்த மவுசு.. கங்குவாவை எதிர்பார்க்கும் ஃபேன்ஸ்.. ப்ளூ சட்டை மாறன் பகீர்!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தை விட சூர்யா நடித்துள்ள கங்குவா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவதாக ப்ளூ சட்டை மாறன் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவுகள் வெளியாகி உள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் கங்குவா படக்குழு வெளியிடவில்லை.

சமீபத்தில், கடுப்பான சூர்யா ரசிகர்கள் போஸ்டரை ஒட்டி ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவுக்கு ஒரு பாகுபலி: பிரபாஸுக்கு ஒரு பாகுபலி போல சூர்யாவுக்கு ஒரு பாகுபலியாக கங்குவா படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 300 கோடிக்கு மேல் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் 3d தொழில்நுட்பத்துடன் பல்வேறு மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பீரியட் படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர்களும் அதிக அளவில் நடித்துள்ள நிலையில் பான் இந்தியா வெற்றியை சூர்யா டார்கெட் செய்து வருகிறார் என்கின்றனர்.
கடுப்பில் சூர்யா ரசிகர்கள்: கங்குவா படத்தை இந்த ஆண்டு சம்மருக்கு எதிர்பார்த்த ரசிகர்கள் தீபாவளிக்கு கூட படம் வெளியாகுமா என்கிற அறிவிப்பை இதுவரை படக்குழு திட்டமிட்டு அறிவிக்காதது ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக சூர்யா ரசிகர்கள் வெளியிட்ட பேனர் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதில் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
கோட் படத்தை விட கங்குவாவுக்கு மவுசு: ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த ஆண்டு வெளியாக உள்ள படங்களில் அதிகம் நீங்கள் எதிர்பார்க்கும் படம் எது என்கிற கேள்வியுடன் இந்தியன் 2, விடாமுயற்சி, கங்குவா மற்றும் கோட் படங்களை குறிப்பிட்டிருந்தார். அதில் அதிகபட்சமாக 55 சதவீதத்துக்கும் மேல் ரசிகர்கள் கங்குவா படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் கோட் படத்துக்கு 29% ரசிகர்களும் அஜித்தின் மிகுதி படத்துக்கு 10% ரசிகர்களும் கடைசியாக இந்தியன் 2 படத்துக்கு வெறும் 6% ரசிகர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கோட் ஷாட்ஸ் வியூஸ்: கோட் ஷாட்ஸ் வெளியான பின்னர் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு எகிறும் என விஜய் ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், 3 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை 9 மில்லியன் பார்வைகள் மட்டுமே கோட் படத்திற்கு கிடைத்துள்ளது. 10 மில்லியன், 20 மில்லியன் வியூஸ் என விஜய் படங்கள் கெத்துக் காட்டி வந்த நிலையில், லியோ படத்தின் சொதப்பல் கோட் படத்திற்கு அதிகளவில் எதிரொலித்து வருவதாக கூறுகின்றனர். அஜித்தின் விவேகம் பட பைக் காட்சி போலவும் ஜிடிஏ பைக் காட்சி போலவும் உள்ளதாக ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











