Blue Sattai Maran: திருப்பி அடிச்சது மறந்துபோச்சா? பா. ரஞ்சித்தை டார்கெட் செய்யும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்ற சினிமா விமர்சகர்களில் ஒருவர் ப்ளூ சட்டை மாறன். இவரது விமர்சனத்தைப் பார்த்துவிட்டு படம் பார்க்க போலாமா வேண்டாமா என யோசிக்கும் ரசிகர்களும் உள்ளனர். இவர் சினிமாக்களுக்கு விமர்சனம் செய்வது மட்டும் இல்லாமல், அவ்வப்போது சினிமா உலகில் நடைபெறும் நிகழ்வுகளையொட்டியும் தனது கருத்தினைத் தெரிவித்து வருகின்றார். அவ்வகையில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது குறித்து தனது பதிலை கேள்வியாக முன்வைத்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை படத்தினை இயக்குநர்களுக்காக சிறப்புக் காட்சி ஒளிபரப்பட்டது. அதில் கலந்து கொண்ட இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. இன்னும் சொல்லப்போனால் விவாதத்தை உண்டாக்கியது. அதாவது அந்த நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், ஒரு இயக்குநர், எனக்கு மிகவும் பிடித்த பெரிய இயக்குநர். அவர் எனது படத்தை பார்த்துவிட்டார். அவருடன் எனது படத்தைப் பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் அவர் ஒரு இடத்தில் கூட எனது படத்தை பார்த்துவிட்டேன் என கூறியதே இல்லை.

ஆனால், மாரி செல்வராஜ் நீ பயங்கரமான ஆள். அனைத்து இயக்குநர்களையும் அழைத்து அவர்களுக்கு படத்தைப் போட்டுக்காட்டி, அனைவரையும் படம் குறித்து பேச வைத்துவிட்டார். மாரி செல்வராஜ் படங்கள் குறித்து பேசுபவர்கள், அவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தினைத்தான் பாராட்டுவார்கள். அந்தப் படங்கள் குறித்துதான் அதிகம் பேசுவார்கள். ஆனால், கர்ணன் படம் குறித்தோ மாமன்னன் படம் குறித்தோ பேசமாட்டார்கள். அதற்கு காரணம் கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களில் கதாநாயகன் திருப்பி அடிக்கின்றான். அதனால்தான் பேச மறுக்கின்றீர்கள் என பேசியிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன்: இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், “ கர்ணன், மாமன்னன் ஹீரோக்கள் திருப்பி அடிச்சாங்க. அதான் உங்களுக்கு பிடிக்கல - பா.ரஞ்சித். இவங்களை விட.. ஆக்ரோசமா பாக்சிங் சண்டைல ஆர்யா திருப்பி அடிச்சாரே!! அந்த படத்தை எல்லாரும் பாராட்டுனாங்களே... அது மறந்து போச்சா ரஞ்சித்?” என குறிப்பிட்டு, கேள்வி எழுப்பியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பா.ரஞ்சித்: ஆனால், பா. ரஞ்சித் குறிப்பிட்டது மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான படங்களை மைய்யப்படுத்தித்தான். ஆனால் ப்ளூ சட்டை மாறன் தனது கேள்வியில் குறிப்பிடுவதோ, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம். ஆனால் இயக்குநர் பா. ரஞ்சித் படங்களில் வெளியான, மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் கதாநாயகன் திருப்பி அடிக்கும் வகையில் படங்களை எடுத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் விபரம்: படத்தினை ஏற்கனவே விமர்சகர்கள் பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூபாய் 1.3 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் படத்தினை ஏற்கனவே ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டதாகவும், தியேட்டர் வசூல் என்பது மாரி செல்வராஜ்க்கு லாபத்தைத்தான் ஈட்டித்தரும் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் படத்தின் புரோமோசனில் பேசுகையில், ”எனக்கு இந்த படம் எவ்வளவு பணம் சம்பாதித்துக் கொடுக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் நான் இந்தப் படத்தை எடுக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன். எனது பெரும் கண்ணீர்தான் இந்தப் படம்” என பல இடங்களில் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











