பராசக்தி பேனர் கிழிப்பு.. இந்த முறை போக்கிரி பொங்கல்தான்.. ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் படமும், பத்தாம் தேதி பராசக்தி படமும் ரிலீஸாகின்றன. இதன் காரணமாக 2026ஆம் ஆண்டு விஜய் Vs சிவகார்த்திகேயன் என்ற போட்டியுடன் தொடங்கியிருக்கிறது. இதில் யார் வெல்வார் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்களால் பராசக்தி பேனர் கிழிக்கப்பட்ட விஷயத்தை வைத்து ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் ட்வீட் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி படத்தை முதலில் 2025ஆம் ஆண்டு அக்டோபருக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அந்த மாதம் விஜய்யின் ஜனநாயகனும் ரிலீஸுக்கு முடிவாகியிருந்ததால்; பராசக்தி பொங்கலுக்கு போனது. திடீரென ஜனநாயகனும் பொங்கலுக்கு தள்ளிப்போனது. இப்படி இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியில் ஆரம்பத்திலிருந்தே குழப்பங்கள் வந்துகொண்டுதான் இருந்தன.
உருவான போட்டி: ஒருவழியாக ஜனநாயகனை ஜனவரி ஒன்பதாம் தேதிக்கு லாக் செய்தார்கள். பராசக்தி 14ஆம் தேதியிலிருந்து பத்தாம் தேதிக்கு வந்தது. இப்படி இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களுக்கு வருவது திரைத்துறையில் பெரிய விவாதத்தை கிளப்பின. முக்கியமாக இந்தப் போட்டியை சிவாதான் வேண்டுமென்றே உருவாக்கினார் என்றெல்லாம் கொளுத்திப்போடப்பட்டது. அதனையடுத்து விஜய் ரசிகர்கள் எஸ்கேவுக்கு எதிராக சோஷியல் மீடியாவில் களமாட தொடங்கினார்கள்.

விளக்கமளித்த சிவகார்த்திகேயன்: இப்படிப்பட்ட சூழலில் சில நாட்களுக்கு முன்பு நடந்த பராசக்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்கே, 'ஜனநாயகனும், பராசக்தியும் பொங்கலுக்கு வருகிறதாமே என்று விஜய் மேனேஜர் ஜெகதீஷிடம் கேட்டேன். அதற்கு அவர் பிரச்னை இல்லை ப்ரோ என்றார். உடனே நான் உங்களுக்கு பிரச்னையில்லை எனக்குத்தான் பிரச்னை. இது விஜய் சாரின் கடைசி படம் என்று சொல்கிறார்கள். அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள் என சொன்னேன்.
அண்ணன், தம்பி பொங்கல்: அவரும் விஜய்யிடம் பேசிவிட்டு லைனில் வந்தார். 'ஒன்னும் பிரச்னை இல்லை ப்ரோ. தாராளமாக வரட்டும். எஸ்கேவுக்கு எனது வாழ்த்துகளை சொல்லுங்கள்' என விஜய் சொன்னதாக கூறினார். இதுதான் உண்மையில் நடந்தது. இடையில் பலர் என்னவெல்லாமோ சொல்கிறார்கள். அது அவர்களுக்கு வன்மம், வியாபாரம். 33 வருடங்கள் விஜய் நம்மை என்ட்டெர்டெயின் செய்திருக்கிறார். ஜனநாயகனை கொண்டாடுங்கள். பத்தாம் தேதி பராசக்தியை கொண்டாடுங்கள். இது அண்ணன், தம்பி பொங்கல்தான்" என்றார்.
பேனரை கிழித்த ரசிகர்கள்: சிவகார்த்திகேயனின் அந்த விளக்கம் அனைத்து யூகங்களுக்கும், அவதூறுகளுக்கும் முற்றுப்புள்ளியை வைத்துவிட்டது. ஆனாலும் ரசிகர்களில் ஒருதரப்பினர் இன்னமும் பராசக்தியை வன்மத்தோடு எதிர்க்கும் வேலைகளில் இருக்கிறார்கள். பராசக்தி ட்ரெய்லர் ரிலீஸான நாளில்கூட மதுரையில் ஒரு திரையரங்கத்தில் அப்படத்தின் பேனர் விஜய் ரசிகர்களால் கிழிக்கப்பட்டது. அது பலரிடமும் முக சுளிப்பை உண்டாக்கியது.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "மதுரை Ritzy தியேட்டரில் பராசக்தி பேனரை கிழித்து எறிந்த விஜய் ரசிகர்கள். திரைப்படம் பார்ப்பதை போர்க்கள அனுபவம் போல மாற்ற விடாமல் தடுக்க வேண்டியது அரசு, காவல்துறை மற்றும் திரையரங்க நிர்வாகத்தின் பொறுப்பு. இல்லாவிட்டால் இம்முறை போக்கிரி பொங்கல்தான்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











