சப் டைட்டிலோட ரிலீஸ் பண்ணுங்க! மலையாள சினிமாகாரர்களுக்கு ப்ளூ சட்டை மாறன் வேண்டுகோள்!
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தமிழ் படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் வேற்று மொழியில் நடிக்கும் கதாநாயகர்கள் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் கிடையாது. படம் நன்றாக இருந்தால் படத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். அதனால்தான் வேற்று மொழிகளில் சூப்பர் ஸ்டாராக உள்ள பல முன்னணி நடிகர்கள் நேரடி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து தமிழ் நாட்டில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளனர்.
கதாநாயகர்களையை கொண்டாடும் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடாமல் இருப்பார்களா?. அப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் வேற்று மொழிப் படங்களில் மலையாள சினிமாவுக்கு என்றைக்குமே முன்னுரிமை உள்ளது. மிகவும் எளிமையான கதை, அதற்கு நேர்த்தியான திரைக்கதை, பில்டப் இல்லாத காட்சிகள் என ஒரு கமர்சியல் படத்திற்குள் சிறந்த கலைப் படைப்பினைத் தந்து விடுவதில் மலையாள சினிமா கலைஞர்கள் பலரும் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

அண்மையில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ், பிரமலு, கண்ணூர் ஸ்குவாட், ஆவேஷம் உள்ளிட்ட படங்களுக்கு தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு முன்னர் வெளியான கும்லாங்கி நைட்ஸ், ஜல்லிக்கட்டு, திர்ஷியம், பெங்களூரு டேஸ் உள்ளிட்ட பல படங்களையும் பட்டியலிட முடியும். தமிழ் மக்களிடையே மலையாளப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் மலையாள படங்களை தமிழ் நாட்டில் தமிழில் டப் செய்தோ அல்லது நேரடியாக மலையாளத்திலோ படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் நேற்று, அதாவது ஜூலை 27ஆம் தேதி அமலா பால் மற்றும் ஆசிஃப் அலி ஆகியோரது நடிப்பில் வெளியான லெவல் கிராஸ் படத்திற்குச் சென்றுள்ளார். அவர் படம் பார்க்கச் சென்ற தியேட்டரின் டிக்கெட் கவுன்ட்டரில் லெவல் கிராஸ் படம் பார்க்க வந்த ரசிகர்கள் படத்திற்கு சப் டைட்டில் உள்ளதா எனக் கேட்டுள்ளனர். இதற்கு திரையரங்கத்தினர் தரப்பில் இருந்து இல்லை எனக் கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் படம் பார்க்காமல் சென்றுள்ளனர்.

வேண்டுகோள்: ஆனால் படம் பார்க்கச் சென்ற ப்ளூ சட்டை மாறன், படம் சப் டைட்டிலுடன் தான் திரையிடப்பட்டது எனக் கூறுகின்றார். மேலும் மலையாள சினிமா உலகத்தினருக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார். அதில், மலையாள சினிமா உலகத்தினர் தாங்கள் படத்தினை ரிலீஸ் செய்யும்போது எப்போதும் சப் டைட்டிலுடனே படத்தை ரிலீஸ் செய்யுங்கள். தரமான படங்களைத் தொடர்ந்து வழங்கும் மலையாள சினிமாவினர் இதனை எப்போதும் பின்பற்றினால், சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என லெவல் கிராஸ் படத்தின் விமர்சனம் குறித்து பேசும்போது இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
அமலா பால்: லெவல் கிராஸ் படத்தின் புரோமோசனுக்காக கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்ற அமலா பால் கஷார்ட்ஸ் அணிந்திருந்ததற்காக பலரது விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால் அதற்கு அமலா பால் கன்னத்தில் அறை விட்டத்தைப் போல் பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











