தலைவர் 173.. சுந்தர்.சி விலகியதற்கு காரணம் என்ன?.. ப்ளூ சட்டை மாறன் ஓபன்.. ஒருவேளை இருக்குமோ
சென்னை: ரஜினியை வைத்து சுந்தர்.சி படம் இயக்குவதாக வந்த அறிவிப்பு எப்படி பேசுபொருளானதோ அதைவிட அதிகம் ஆகியிருக்கிறது அவர் விலகியது. படத்திலிருந்து அவர் வெளியேறியதற்கு பலரும் பல காரணங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எங்கும் அதுபற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இதுகுறித்து ட்வீட் போட்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் ஃபேமிலி ஆடியன்ஸுக்காக படம் செய்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. அப்படி ஒரு படம் செய்யலாம் என்ற மைண்ட் செட்டில் இருந்தபோதுதான் ரஜினி - கமல் - சுந்தர்.சி கூட்டணி உறுதி செய்யப்பட்டது. காமெடி, எமோஷனல் என குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படத்தை சுந்தர்.சி தரமாக உருவாக்குவார் என்றுதான் அவரை இந்தப் படத்துக்குள் அழைத்துவந்தார்கள் ரஜினியும், கமலும்.
ட்விஸ்ட் கொடுத்த சுந்தர்: ஆனால் அவரோ இரண்டு பேருக்கும் சரியான ட்விஸ்ட்டை கொடுத்துவிட்டார். படத்திலிருந்து அவர் விலகுவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "தவிர்க்கவே முடியாத சில காரணங்களால் ரஜினியின் தலைவர் 173 படத்திலிருந்து விலகுகிறேன். கனத்த இதயத்துடனேயே இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்குவது எனது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு.

எதிர்பார்த்த எல்லாமும் நடக்காது: சில நேரங்களில் நம் எதிர்பார்த்த அனைத்துமே வாழ்க்கையில் நடந்துவிடுவதில்லை. இந்தப் படம் பற்றி கடந்த மூன்று நாட்களாக பேசிக்கொண்டதெல்லாம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகும். அதில் பல பாடங்களை அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அவை அனைத்தும் எனது சினிமா கரியரில் அடுத்தடுத்த கட்டத்துக்கு நான் செல்வதற்கு உறுதுணையாகவே இருக்கும்.
மிகவும் கடினமான முடிவு: இருந்தாலும் தலைவர் 173 படத்திலிருந்து விலகுவது என்பது எனக்கு மிகவும் கடினமான முடிவுதான். அதை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்த அவர்கள் இரண்டு பேருக்கும் அன்பும், நன்றியும். அதுமட்டுமின்றி அனைவரிடமும் நான் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். ரஜினி - கமல் என்ற ட்ரீம் கூட்டணியிலிருந்து சுந்தர் விலகியது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: அவர் விலகியதற்கு பலரும் பல காரணங்களை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்ந்லையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் செய்து தருவதுதான் சுந்தர்.சியின் பாணி. அதற்கு கமல் ஒப்புக்கொள்ளவில்லையா?. தாதா கேரக்டர் படங்கள் தமிழில் பணால் ஆகிவருவதால் ஜாலியாக படம் பண்ண நினைத்த தலீவரின் எண்ணம் பலிக்காமல் போனதா?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
யார் இயக்குநர்: இதற்கிடையே சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து அடுத்து யார் இயக்குநர் என்ற கேள்வியும் உண்டாகியிருக்கிறது. முதலில் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. இப்போது அந்த லிஸ்ட்டில் தூங்காவனம் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா பெயரும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











