சிவகார்த்திகேயனின் பராசக்தி.. ரவுடி படத்தை எடுத்திருக்காங்க.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் இப்படி இருக்கே?
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் பராசக்தி. ஜிவி பிரகாஷ் இசையமைக்க டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை சுதா இயக்கியிருக்கிறார். படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
சூரரைப் போற்று படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு சுதா கொங்கராவும், மதராஸி சுமார் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனும் சேர்ந்திருக்கும் படம் பராசக்தி. ரவி மோகன் வில்லனாகவும், அதர்வா சிவகார்த்திகேயனின் சகோதரர் ரோலையும் ஏற்றிருக்கிறார்கள். தெலுங்கில் கலக்கிவந்த ஸ்ரீலீலா தமிழில் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பலத்த எதிர்பார்ப்பு: படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கனவே சூர்யாதான் இதில் ஹீரோவாக நடித்திருக்க வேண்டியது. அவர் வெளியேறி எஸ்கே உள்ளே வந்தார். இப்படத்துக்கு அவர் அதீத முக்கியத்துவம் கொடுத்தார். அப்படி என்ன ஸ்பெஷல் என்ற ஆவல் எழுந்தது. போதாக்குறைக்கு ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்ட வரலாறும் இதில் இருக்கிறது என தெரியவர படத்துக்கு இருந்த ஹைப் இரண்டு மடங்காகிவிட்டது.
நேற்று ரிலீஸ்: படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஜனநாயகன் படமும் ரிலீஸ் இல்லை என்பதால் அதற்கு காத்திருந்த ரசிகர்கள் கூட்டம் ஒரு பகுதி பராசக்திக்கும் போனது. படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே எழுந்துள்ளன. மேலும் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் அப்படம் 11.50 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் சாக்நில்க் இணையதளம் கூறுகிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இப்படத்துக்கு தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
ப்ளூ சட்டை விமர்சனம்: அவர் தனது விமர்சனத்தில், "இந்தப் படத்தை 1937ல் ஆரம்பித்து 64, 65வரை எடுத்திருப்பார்கள். மொழி போர் தியாகிகளான தாளமுத்து, சின்னசாமிவரைக்கும் நமது கண்கள் முன் நிறுத்துவார்கள் என எதிர்பார்த்தோம். ஹிந்தியை இன்னும் நாம் ஏன் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு சரியான பதிலாக இருக்கப்போகிறது என்று நினைத்துதான் பார்த்தோம். படத்தை பார்த்தால், இவர்களிடம் போய் எதிர்பார்த்துவிட்டோமே. இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்னும் அளவுக்கு ஆக்கிவிட்டார்கள்.
மணி ஸ்டைலில்: இந்தக் கதை பாலா எடுப்பது மாதிரி ராவான ஒரு கதை. இதை மணிரத்னம் ஸ்டைலில் கொஞ்சம் மசாலா எல்லாம் போட்டு கலர்ஃபுல்லாக எடுப்போம் என இயக்குநர் எடுத்திருக்கிறார். இரண்டு பேரிடமும் அவர் உதவி இயக்குநராக இருந்தவர். இந்தப் படத்தின் கதையை, 'ஹீரோ ஒரு நல்ல ரவுடி. இந்த நல்ல ரவுடி அட்டகாசம் செய்கிறார். இந்த நல்ல ரவுடியை அடக்க கெட்ட போலீஸை கொண்டு வருகிறார்கள். அவர் திறமையான அதிகாரி. அவரும், ஹீரோவும் சண்டை போடுகிறார்கள். அதில் ஹீரோவின் நண்பர் இறந்துவிடுகிறார். இதனால் மனம் உடைந்த ஹீரோ ரவுடித்தனத்தை விடுகிறார்.
ஆனால் அவரது தம்பியும் பெரிய ரவுடி ஆகிவிட்டார். இப்போது ஹீரோ அதிர்ச்சியாகி, தம்பியிடம் படிக்கும் வேலையை பார் என அட்வைஸ் செய்கிறார். இதற்கிடையே தம்பியை வைத்து அண்ணனை கொன்றுவிடலாம் என போலீஸ் உள்ளே வருகிறார். உள்ளே வந்தவர் அண்ணனுக்கு பதிலாக தம்பியை கொல்கிறார். எனவே பழைய தொழிலை மீண்டும் கையில் எடுத்து வில்லனை எதிர்த்து ஹீரோ நிற்கிறார். பிறகு என்ன ஆனது என்பதற்குள் ஹிந்தியை பற்றி பேசுகிறார்கள்.
பாடல் வேறு: இதில் இரண்டு, மூன்று பாடல்கள் வேறு. ஹிந்தி திணிப்பை பற்றி படம் எடுக்க சொன்னால் ஹீரோ - வில்லன் படத்தை எடுத்திருக்கிறார்கள். 40 வருட கதையை பத்து பாகங்களாக எடுக்கலாம். இவர்கள் இரண்டரை மணி நேரத்துக்குள் சொல்கிறார்கள். அதில் ஒரு மணி நேரம் ஹீரோயினுடன் ஹீரோ பாடல் பாடுகிறார். ஹிந்தியை எதிர்க்கிறார்; ஹீரோயினிடம் தெலுங்கு கற்றுக்கொள்கிறார். படத்தில் செயற்கைத்தனங்கள் நிறைய இருக்கின்றன. சிவகார்த்திகேயன் ஓரளவுக்கு இயக்குநர் கொடுத்த வேலையை செய்வார். ஆனால் இதில் அதையும் செய்யவில்லை. ஆகமொத்தம் இந்தப் படம் சர்க்கரை பொங்கலில் ரசம் ஊற்றி சாப்பிட்ட மாதிரி இருக்கு" என்றார்.


Click it and Unblock the Notifications











