பேட்ரியாட் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. சொம்படிக்கிறாங்க.. நயன்தாரா ஏன் என்றே தெரியல?
சென்னை: மம்மூட்டியும், மோகன் லாலும் இணைந்து நடித்திருக்கும் படம் பேட்ரியாட். அவர்களுடன் ஃபகத் பாசில், ரேவத், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் நாராயணன் இயக்கியிருக்கும் இந்தப் படமானது நேற்று ரிலீஸானது. ஓரளவுக்கு ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக கடந்த பல வருடங்களாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள் மம்மூட்டியும், மோகன் லாலும். எத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும் இவர்கள் தங்களுக்கான மார்க்கெட்டை தக்க வைத்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பேட்ரியாட் படத்தில் நடித்திருக்கிறார்கள். மகேஷ் நாராயணன் இயக்கியிருக்கிறார். இரண்டு ஜாம்பவான்கள் சேர்ந்து நடித்திருப்பதால் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

எப்படி இருக்கு படம்?: அதே ஹைப்போடு நேற்று படம் பார்த்த ரசிகர்களும் பெரும்பாலும் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தார்கள். இரண்டாவது பாதியில்தான் மோகன் லால் வந்தாலும் வந்த பிறகு இரண்டு பேரும் ஸ்க்ரீனில் தோன்றுவது பட்டாசாக இருக்கிறது என்றும் புகழ்ந்தார்கள். இதன் காரணமாக விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவை யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அந்த வீடியோவில் அவர், "இது ஸ்பை சாஃப்ட்வேர் பற்றிய படம். அதை எதிரிகளுக்கு பயன்படுத்த சொன்னால் இவர்கள் எதிர்க்கட்சி உள்ளிட்டோருக்கு பயன்படுத்துகிறார்கள். அதனால் வரும் பிரச்னைகள்தான் படம். மொத்தம் இந்தப் படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது. ஆனால் போனதே தெரியவில்லை. அதுவும் முதல் பாதி மட்டும் ஒன்றரை மணி நேரம். அதெல்லாம் போனதே தெரியவில்லை. முதல் பாதி இப்படி என்றால் இரண்டாவது பாதி அப்படியே நேர் மாறாக இருக்கிறது. பல இடங்களில் நொண்டி அடிக்கிறது.
சொம்பு அடிக்கிறாங்க: இரண்டாவது பாதிக்கு மேல்தான் மோகன் லால் வருகிறார். முன்பெல்லாம் எம்ஜிஆர் படங்களில் அவரை புகழ்வதற்கே நாகேஷ், தேங்கா சீனிவாசன் போன்றோரை இயக்குநர்கள் வைத்திருப்பார்கள். இதில் அப்படி யாருமே இல்லாததால் மம்மூட்டி மோகன் லாலையும், மோகன் லால் மம்மூட்டியையும் மாற்றி மாற்றி புகழ்ந்து சொம்பு அடித்துக்கொள்கிறார்கள். மந்திரி வில்லன், மந்திரி மகனும் வில்லன் என்பது மாதிரிதான் ஃபகத் பாசிலின் கேரக்டரை எல்லாம் வடிவமைத்திருக்கிறார்கள்.
ஏன் நயன்தாரா?: இந்தப் படத்தில் ஏகபட்ட பேர் நடித்திருக்கிறார்கள். அவர் எல்லோரும் நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள். ஆனால் எந்த கேரக்டரும் மனதில் நிற்கும்படியே இல்லை. சாதாரணமாக வந்து செல்வது மாதிரிதான் இருக்கிறது. இந்தப் படத்தில் நயன்தாரா எல்லாம் ஏன் என்றே தெரியவில்லை. ஆகமொத்தம் வேலை வெட்டி எதுவும் இல்லாவிட்டால் தாராளமாக இந்தப் படத்தை சென்று பார்த்துவிட்டு வரலாம். உயிருக்கு எந்த சேதாரமும் இருக்காது" என்றார்.


Click it and Unblock the Notifications