தாமு மீது ஆக்ஷன் எடுங்க.. மாணவிகளை அழ வைத்து எமோஷனை கிளறிவிடுகிறார்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!
சென்னை: காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பலரை சிரிக்க வைத்து வந்த நடிகர் தாமு திடீரென பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை நல்வழிப்படுத்துகிறேன் என்கிற பெயரில் பேச பேச, குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகி மாணவர்களும் மாணவிகளும் கதறி அழும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
மாணவர்களை அழ வைக்கும் தாமுவுக்கு எதிராக கண்டனங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில், அவர் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் தற்போது பொங்கி உள்ளார்.

காமெடி நடிகர் தாமு: வானமே எல்லை, விஜய்யின் நாளைய தீர்ப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து 1992ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் தாமு. காதலன், புதிய மன்னர்கள், பாட்ஷா, ஆசை, வான்மதி, லவ் டுடே, அமர்க்களம், கில்லி என ஏகப்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். கில்லி படத்தில் ஓட்டேரி நரியாக தாமு நடித்ததை இப்போது பார்த்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விழுந்து விழுந்து சிரிப்பார்கள். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டான தாமு படங்களிலும் தனது குரல் வித்தையை காட்டி கலக்கியுள்ளார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் போல மிமிக்ரி செய்து அசத்தி இருப்பார்.
10 வருடங்களாக கல்விச் சேவை: காமெடி நடிகராக இருந்து வந்த தாமு திடீரென கல்வித்துறையில் தனது சேவைகளை செய்ய வேண்டும் என முடிவு செய்தார். கடந்த 10 வருடங்களாக, கல்விச் சேவையில் அவர் ஆற்றிய பணிகளை பாராட்டி தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான விருது வழங்கப்பட்டது.
மாணவர்களை அழ வைக்கிறார்: கடந்த சில ஆண்டுகளாக பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பு பேச்சாளராக செல்லும் தாமு பெற்றோர்கள் கஷ்டப்பட்டு மாணவர்களை எப்படி படிக்க வைக்கின்றனர் என்பதை எடுத்துச் சொல்ல சொல்ல, குற்ற உணர்ச்சியால் மாணவர்களும் மாணவிகளும் கதறி அழும் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ப்ளூ சட்டை மாறன் விளாசல்: "மாணவிகளை அழ வைத்து போலியான எமோஷனை கிளறிவிடும் இந்த நடிகர்.. இனி பள்ளி, கல்லூரி மேடைகளில் பேசுவதை தடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

இதற்கான நடவடிக்கையை தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் உடனே எடுக்க வேண்டும்." என ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்வீட் போட்டுள்ளார். நடிகர் தாமுவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











