படம் ஓடுதோ இல்லையோ.. ஓவர் பில்ட் அப் சுவாரஸ்யமா இருக்குடாப்பா.. S.Kவை அட்டாக் செய்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வரும் 31ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் அமரன். இப்படத்தினை உலகநாயகன் கமல் ஹாசன் தயாரித்துள்ளார். படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வரும் தீபாவளிக்கு ஜி.வி. பிரகாஷ் இயக்கத்தில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று அதாவது அக்டோபர் 18ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசினார். அதனை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் 22வது படமான அமரன் படம், வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி ராகுல் சிங் மற்றும் ஷிவ் ஆரூர் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பிராய்லர்ஸ்: ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை எடுக்கத் திட்டமிட்டபோது, வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரிடம், கட்டாயம் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு நாங்கள் மேலும் புகழை உண்டாக்குவோம் என உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.

படத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்களை சிவகார்த்திகேயன் முன்பு ஒரு பேட்டியில் பகிர்ந்தபோது பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சொன்னார். அதில், டீசரில் இடம் பெற்ற காட்சியை நாங்கள் ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாமிற்கே சென்று படம் பிடித்தோம். அந்தக் காட்சியை படம் பிடித்து முடித்ததும், அங்கிருந்த ராணுவ வீரர்கள் கைதட்டினார்கள். அதன் பின்னர் அவர்கள், ' நீங்கள் பேசும் மொழி எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் நீங்கள் பேசியதைக் கேட்டபோது எங்களுக்கு புல்லரித்தது. இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள்' எனக் கூறியதாக கூறினார்.

அஜித்: இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், நடிகர் அஜித்குமார் தன்னை ஒருமுறை வாழ்த்தியதாகக் கூறினார். அதாவது, நண்பர் ஒருவரின் தீபாவளி கெட் டூ கெதர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றபோது, அங்கு அஜித் சாரைச் சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்ததும் Welcome to the big league எனக் கூறினார். எனக்கு புரியாததால், மீண்டும் அவரைப் பார்த்து சார் எனக் கூறிவிட்டு நின்றேன். உடனே அவர், உங்களின் வளர்ச்சியைப் பார்த்து சிலர் பயப்படுகின்றார்கள் என்றால், Welcome to the big league தானே சிவா எனக் கூறியதாக கூறினார்.

ப்ளூ சட்டை மாறன்: சிவகார்த்திகேயன் இவ்வாறு கூறியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், இந்தச் செய்தியைப் பார்த்த பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திகேயனின் பேச்சினை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதாவது, "படம் ஓடுதோ இல்லையோ.. இந்த ஓவர் பில்ட் அப் எல்லாம் சுவாரஸ்யமா இருக்குடாப்பா. துப்பாக்கி கனம் ஜாஸ்தி, Big League" என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே அமரன் பட பிரஸ் மீட்டில் துப்பாக்கியின் கனம் ஜாஸ்தி எனத் தெரியும், அதை பார்த்துதான் கையாளவேண்டும் என சிவகார்த்திகேயன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











