செருக்கும், பொறாமையும் உங்கள் கவச குண்டலங்கள்.. இளையராஜாவை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்.. ஏன்?
சென்னை: இளையராஜாவின் 'தி வாலியன்ட்' சிம்பொனி அரங்கேற்றப்பட்ட நிலையில், லிடியன் நாதஸ்வரத்தை வைத்து அவர் சிம்பொனி எழுதியதாக சில பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய இளையராஜா லிடியன் இசையமைத்து காட்டியது சினிமா பிஜிஎம். சிம்பொனி என்றால் என்னவென்று கற்றுக்கொண்டு வா என அறிவுரை வழங்கினேன் எனக் கூறினார்.

இந்நிலையில், தனது பேரன் வயது சிறுவனை இப்படியா இளையராஜா இழிவுப்படுத்துவது என்றும் செருக்கும், பொறாமையும் உங்கள் கவச குண்டலங்கள் என கடுமையாக தாக்கி பதிவிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
இளையராஜாவின் சிம்பொனிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் சிம்பொனி இசை மீதான சர்ச்சையும் சமூக வலைதளத்தில் வெடித்திருப்பது திரையுலகில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
இளையராஜாவுக்கு எதிராக ப்ளூ சட்டை மாறன்:
"தனது 14 வயதிலேயே World's Best Talent போட்டியில் வெற்றிபெற்று உலகப்புகழ் பெற்றவர் லிடியன் நாதஸ்வரம்.
* 2022 ஆம் ஆண்டு இளையராஜாவை சந்தித்த பிறகு தன்னை அவரது முதல் மற்றும் ஒரே சீடனாக ஏற்றதை மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் குறிப்பிட்டார்.
* தற்போது திருக்குறளின் 1,330 குறள்களுக்கும் பின்னணி இசையமைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வருகிறார் லிடியன்.
* இந்த இசைத்தொகுப்பு வெளியானால் தமிழர்களின் புகழ் உலகெங்கிலும் எதிரொலிக்கும்.
* பியானோ, ட்ரம்ஸ் உள்ளிட்ட கருவிகளை வாசிக்கும் ஆற்றல் பெற்றவர். ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்து உலக அரங்கில் பிரமிப்பை ஏற்படுத்தியவர்.
* இவருக்கு தற்போது வயது 20 மட்டுமே.
* 80 வயதை தாண்டிய இளையராஜாவிடம் சிம்பொனி இசை குறித்த விளக்கங்களை சமீபத்தில் கேட்டுள்ளார். அதில் தான் செய்த இசை முயற்சியையும் அவருக்கு காட்டியுள்ளார்.
* தனது பேரன் வயதுள்ள சிறுவன் மற்றும் ஒரே சிஷ்யன் என்பதால்.. லிடியனுக்கு இவரே சிம்பொனி பயிற்சி அளித்திருக்க வேண்டும்.
* ஆனால் உனது சிம்பொனி இசை சினிமா பாடல் போல உள்ளது. சிம்பொனியை முழுமையாக கற்றுக்கொண்டு வா எனக் கூறியுள்ளார்.
* அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. இதை பொதுவெளியிலும் கூறி லிடியனை சிறுமைப்படுத்துவது.. பெரிய மனிதனுக்கு அழகா?
* திரை இசையில் தன்னை மீறி எவனுமில்லை என்று ஆடியபோது.. ரஹ்மான் வந்து இவரது கொட்டத்தை அடக்கினார்.
* அப்போது ஆரம்பித்த சரிவு.. 33 ஆண்டுகள் ஆகியும் மீளவில்லை.
* தற்போது சிம்பொனியில் தனக்கு போட்டியாக இன்னொரு தமிழன்.. அதுவும் 20 வயது சிறுவன் வந்துவிடக்கூடாது எனும் எரிச்சல் தான் இவரை இப்படி பேச வைத்துள்ளது.
* ஆனால் திரையிசையில் உங்கள் சகாப்தத்தை வீழ்த்திய ரஹ்மானை போல.. சிம்பொனி, திருக்குறள் பிண்ணனி இசையென தமிழர்களின் புகழை உலகெங்கும் கொண்டு செல்லப்போகும் லிடியனும் ஜெயிப்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் ராஜா.
* நீங்கள் இதுவரை ஒரு இசைக்கலைஞரையும் உருவாக்கியதில்லை. ஒரே ஒரே சிறுவன் உங்களை குருவாக ஏற்று வந்தான்.
* அவனுக்கு நீங்கள் அளித்துள்ள கசப்பான பரிசு இதுதான்.
* உங்கள் இசையின் மேன்மையை.. உங்கள் ஆணவம் தொடர்ந்து கீழே இறக்கி வருகிறது.
* உங்கள் இசையை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள். இப்படியான திமிர் பிடித்த பேச்சுகளையோ, பிறரின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படும் செயல்களையோ அல்ல.
* எவ்வளவு சொன்னாலும் நீங்கள் திருந்தப் போவதும் இல்லை ஏனெனில் எல்லை மீறிய செருக்கும், பொறாமையும் உங்கள் கவச குண்டலங்கள்." என ப்ளூ சட்டை மாறன் கடுமையாக சாடியுள்ளார்.
லிடியனின் புதிய சிம்பொனி: சமீபத்தில் இளையராஜா சிம்பொனி இசையை அரங்கேற்றிய நிலையில், லிடியன் நாதஸ்வரம் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இளையராஜா கொடுத்த ஊக்கத்தால் தான் தனது முதல் சிம்பொனியான New Beginings என்பதை தான் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் லிடியனும் தனது சிம்பொனியை அரங்கேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











