அடிப்படை ஆராய்ச்சி கூட இல்ல.. இளையராஜா பயோபிக் போஸ்டர்.. ப்ளூ சட்டை மாறன் கிளப்பிய பஞ்சாயத்து!
சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள இளையராஜா படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ் கையில் ஆர்மோனியம் பெட்டியுடன் சென்னை சென்ட்ரல் நிலையம் அருகில் நிற்பது போலவும் அவர் நிற்கும் இடத்தில் சேறு இருப்பது போல காட்சிப்படுத்தி இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
அந்த காலத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக இப்படி சேறு இருந்தது கிடையாது என்றும் நல்ல தார்சாலை தான் போடப்பட்டு இருந்ததாகவும் கூறுகின்றனர். ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது, இளையராஜா பயோபிக் பற்றிய பஞ்சாயத்தை கிளப்பியுள்ளார்.

இளையராஜா பயோபிக்: தனது வாழ்நாளில் மிகப்பெரிய சாதனைகளை படைத்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பற்றிய பயோபிக் படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இறந்தவர்களின் பயோபிக் படங்களை மட்டுமின்றி இருக்கும் போதே நம்முடைய பயோபிக் படத்தை பார்க்க நினைப்பவர்களின் படங்களும் உருவாகி வருகின்றன. தோனி, மேரி கோம், சச்சின் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்களை தொடர்ந்து தற்போது இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படம் உருவாக உள்ளது.
சென்ட்ரலில் சேறு இல்லையே: சென்னையின் மையப்பகுதியான சென்ட்ரலுக்கு இளையராஜா வந்து இறங்கும் போது அவர் நிற்கும் இடம் சேறாக இருந்ததாக அருண் மாதேஸ்வரன் எடுக்கவுள்ள பயோபிக் படத்திற்கு டிசைன் செய்துள்ள போஸ்டருக்கு எதிராக ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்துள்ளன. சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கும் கதையை கொண்டு கேப்டன் மில்லர் படத்தை உருவாக்கிய அருண் மாதேஸ்வரன் புதிய ரக துப்பாக்கிகளை பயன்படுத்தினார் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்த நிலையில், தற்போது இந்த சர்ச்சையையும் கிளப்பி உள்ளார்.
மதராசப்பட்டினம்: ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா, எமி ஜாக்சன் நடித்த மதராசப்பட்டினம் படத்திலேயே சென்னை சென்ட்ரலை அப்படி அழகாக காட்டியிருப்பார்கள். பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கூட சென்னையை அழகாக காட்டியிருப்பார்கள். ஆனால், சாணிக் காயிதம் இயக்குநர் ஆரம்பத்திலேயே இப்படி காட்ட வேண்டும் என்கிற நோக்கம் எங்கிருந்து வந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அடிப்படை ஆராய்ச்சி கூட இல்லை: இளையராஜா பயோபிக்கின் அறிமுக போஸ்டரே தப்பாக இருக்கே என சோஷியல் மீடியாவில் பலர் ட்ரோல் செய்த ஸ்க்ரீன் ஷாட்டுகளை வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன், "அடிப்படை ஆராய்ச்சி கூட இல்லாத போஸ்டர் டிசைன். அருண் மாதேஸ்வரனும், தனுஷூம்.. இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்துருக்காங்களோ.." என தனது கவலையை ட்வீட்டாக போட்டு கலாய்த்து வருகிறார்.
கெடுக்காம இருந்தா சரி: ஜெயலலிதா பயோபிக் பண்றேன் என தலைவி எனும் படத்தை கங்கனா ரனாவத் வைத்து எடுத்து தலைவலியை கொடுத்தது தான் மிச்சம். இளையராஜா பயோபிக் எடுத்து அந்த ஃபர்னிச்சரையும் போட்டு உடைத்து விடாதீர்கள் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தனுஷ் நல்லாத்தான் நடிப்பாரு, ஆனால், அருணை நினைத்தால் தான் அடி வயிறு கலங்குது கேப்டன் மில்லர் போல இளையராஜா பயோபிக்கிலும் கோட்டை விட்டால் என்ன ஆகுமோ என ஏகப்பட்ட மீம்களும் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











