இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. சீமான் விவகாரம்.. வடிவேலுவையும் S.K.வையும் இழுத்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை செய்தியாளர் சந்திப்பில் பேசினார். இது தமிழ் நாடு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்துக்கு ஆதாரம் கேட்டால், அதற்கு பல விதமான பதில்களை தொடர்ந்து கூறி வருகின்றார். இப்படியான நிலையில், சீமான் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
சீமான் திரைத்துறையில் இருந்து அரசியல் களத்திற்குச் சென்றவர்களில் ஒருவர். இன்னும் சொல்லப்போனால், திரைத்துறை மற்றும் அரசியல் துறையில் ஒரே காலகட்டத்தில் ஈடுபாடு காட்டி வந்தார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்குப் பின்னர் தீவிர அரசியலில் களமிறங்கிய சீமான் இன்று வரை அரசியல் களத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான் அவ்வப்போது சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இதில் சில வாரங்களுக்கு முன்னர், நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பெரியார் கூறியதாக கூறி ஒரு கருத்தினைக் கூறினார். இது பெரியாரிய உணர்வாளர்களை கோபப்படுத்தியது. இதனால், பெரியாரிய உணர்வாளர்கள் பெரியார் அவ்வாறு கூறவில்லை, பெரியார் அப்படிக் கூறியதாகக் கூறும் சீமான் அதற்கு ஆதாரத்தை காட்டவேண்டும் எனக் கூறி, சீமானுக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். மேலும் அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
சீமான்: இந்நிலையில் இன்றும் அதாவது, ஜனவரி 22ஆம் தேதி மே 17 இயக்கம், ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினர், கட்சியினர், பெரியாரிய உணர்வாளர்கள் இணைந்து சீமானின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் தொடர்பாக ஏற்கனவே, அறிவிப்புகள் வெளியிடப்பட்டதால், சீமான் சென்னையில் தான் வசிக்கும் வீட்டில், தனது ஆதரவாளர்களை நேற்று இரவே திரட்டி வைத்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன்: இப்படியான நிலையில், சீமான் தொடங்கி, நாம் தமிழர் கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலரிடமும் இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்விகளை தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பெரியார் பேசியதாக சீமான் தெரிவித்துள்ள கருத்துக்கு ஆதாரத்தைக் கேட்டால், நாம் தமிழர் கட்சியில் இருந்து இதுவரை பதில் வரவில்லை. இப்படியான நிலையில், சீமான் பெரியார் குறித்து அவதூறான கருத்தினைத் தெரிவித்த நாளில் இருந்து சீமானுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருபவர்களில், ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தற்போது ஒரு பதிவினை இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

வடிவேலு S.K.: அதில், " கிணறு வெட்டுன ரசீதை கேட்டு துரத்தும் நிருபர்கள். மான் கராத்தே போட்டு நேக்காக தப்பிக்கும் அண்ணன்" என பதிவிட்டுள்ளார். அதாவது காமெடி ஒன்றில் வடிவேலு தன்னிடம் கிணறு வெட்டிய ரசீது உள்ளதாக கூறுவார். ஆனால் கிணறே வெட்டி இருக்க மாட்டார். அதேபோல், மான் கராத்தே படத்தில் தன்னை விட பலமான குத்துச் சண்டை வீரர்களிடம் இருந்து சிவகார்த்திகேயன் தப்பிக்க சில வழிகளைக் கையாளுவார், அதனை மான் கராத்தே என்பர். அதுபோலத்தான் தற்போது சீமான் தப்பித்து வருகின்றார் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











