Sivakarthikeyan: விஜய் இடத்துக்கு துண்டு போடும் எஸ்.கே? அர்த்தமற்ற வேலை என பாடம் எடுத்த ப்ளூ சட்டை!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் படம் என்றால் அது, தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில், சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் முதல் நாளில் மட்டும் ரூபாய் 126.32 கோடிகளை அள்ளி அசத்தியது. தமிழ் சினிமாவில் ஒருபடத்தின் மொத்த வசூலே ரூபாய் 100 கோடிகளைத் தொடவேண்டும் என பல படங்கள் திணறிக்கொண்டு இருக்கும்போது, விஜய்யின் கோட் படம் முதல் நாளே அசால்ட்டாக ரூபாய் 126.32 கோடிகளை அள்ளியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் அது குறித்து பார்க்கலாம்.
படத்தின் க்ளைமேக்ஸில் வரும் சிவகார்த்திகேயனிடம், காந்தி கதாபாத்திரம், வில்லன் மோகனை ஒப்படைத்து, எங்கும் தப்பிக்காதவண்ணம், கவனமாக பார்த்துக் கொள்ளும்படி கூறுவார். தொடக்கத்தில் பயத்தை வெளிக்காட்டும் சிவகார்த்திகேயன், அதன் பின்னர் விஜய்யை நோக்கி, " சார் ஒரு நிமிசம், நீங்க இத விட ரொம்ப முக்கியமான வேலையா போறீங்க போல தெரியுது. நீங்க அத பாருங்க. இங்க நான் பாத்துக்குறேன்" எனக் கூறுவார்.

சிவகார்த்திகேயன் பேசும் இந்த வசனம், விஜய் சினிமாவைவிட்டு, அரசியலுக்கு வருவதைக் குறிப்பதாகவும், இனி தமிழ் சினிமாவில் விஜய் இடத்தை தான் நிரப்பப்போவதாகவும் மறைமுகமாக கூறுவதாக இணையத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். பல இணைய வாசிகள், அடுத்த தலைமுறையிடம் சினிமாவைக் கொடுத்துவிட்டு அரசியலுக்குள் நுழைகின்றார் விஜய் என, விஜய்யை சிலாகித்து பேசி வருகின்றனர். இப்படியான நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், சிவகார்த்திகேயன் குறித்தும் அவரது சினிமா வாழ்க்கை குறித்தும் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன்: அதில், " நான் பாத்துக்கறேன் என்றால்? விஜய் இடத்திற்கு வரப்போகிறேன் என்கிறாரா? பலருக்கும் ரஜினி, விஜய் ஆக ஆசை. ஆனால் இந்த இடத்தை பிடிக்க ரஜினிக்கு சுமார் 50 ஆண்டுகளும், விஜய்க்கு 30 ஆண்டுகளும் ஆகியுள்ளது. காதல், குடும்பம், ஆக்சன், காமடி என பல்வேறு ஜானர்களில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்தவர் விஜய். அதனால்தான் இத்தனை கோடி ரசிகர்கள். நீங்கள் முதலில் ரஜினியாக முயன்றீர்கள். அதனால்தான் ரஜினிமுருகன், கேடி பில்லா, வேலைக்காரன், மாவீரன் என டைட்டில் வைத்தீர்கள்.

ரஜினி மகன்: ஜெயிலரில் ரஜினியின் மகன் கேரக்டரில் நடிக்க கடுமையாக முயன்றீர்களாம். உங்கள் நெருங்கிய நண்பர் நெல்சன் சிபாரிசு செய்தும்.. தலைவர் நோ சொன்னதாக தகவல். Not official. ஒருவேளை படம் ஹிட்டானால் உங்களால்தான் ஓடியது என சொல்வார்கள் என்பதால் தலைவர் அலர்ட் ஆகி விட்டாராம்.தலைவரை பின்பற்றினால் இந்த தலைமுறை ரசிகர்களை கவர இயலாது என்பதால் இப்போது விஜய் பக்கம் தாவியுள்ளீர்கள். நீங்கள் இதுவரை நடித்தவை காமடி படங்கள் மட்டுமே. சீரியஸ் முயற்சிகளான வேலைக்காரன், ஹீரோ போன்றவை ஓடவில்லை.

விஜய் - சினிமா - அரசியல்: எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித். இவர்களின் இடங்களை இனி யாரும் பிடிக்க முடியாது. இவர்களுக்கு உள்ள மாபெரும் ரசிகர் பட்டாளமும் இனி கிடைக்காது. விஜய் அரசியலுக்கு சென்றாலும்.. சினிமாவில் அவரது இடத்தை பிறர் பிடிக்க இயலாது. ஆகவே இருக்கும் இடத்தை தக்க வைத்து முன்னேறுவதே சாமர்த்தியம். குட்டி தல, சின்ன தளபதி எனும் கனவு அர்த்தமற்றது" என குறிப்பிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications