TVK Vijay - ரஜினியை போல் மிளகாய் அரைக்கல.. விஜய்யின் தமிழக வெற்றி கழகம்.. ப்ளூ சட்டை மாறன் சப்போர்ட்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியிருக்கிறார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டிருக்கிறார். விஜய்யின் இந்த அரசியல் பயணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் ரஜினிகாந்த்தை பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்திருக்கிறார்.
இளைய தளபதியாக சினிமாவுக்குள் நுழைந்து தளபதியாக மாறி நிற்கிறார் விஜய். இதுவரை 67 படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பல வருடங்களுக்கு பிறகு விஜய் நடிக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அரசியல் விதை: விஜய்யை சினிமாவில் உருவாக்கியதில் முக்கிய பங்கு அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு உண்டு. அவரை பார்த்து பார்த்து செதுக்கினார். மேலும் விஜய்க்கு இருந்த ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக மாறியதும் எஸ்.ஏ.சியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த மக்கள் இயக்கம் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அரசியலுக்கு வர வேண்டும்: கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் விஜய்யோ எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்து வந்தார். அதேசமயம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடந்துவந்தன. இதன் காரணமாக விஜய் அரசியலுக்கு வருவது உறுதிதான் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் ஆரூடம் கூறப்பட்டது.
தமிழக வெற்றி கழகம்: இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே விஜய் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்றும்; சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் தெரிவித்திருக்கிறார். விஜய்யின் இந்த அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இன்னும் ஒரு படம் மட்டும்தான் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், " ரஜினியை போல 25 வருடம் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை. கமலைப்போல பார்ட் டைம் அரசியலும் செய்யப்போவது இல்லை. அந்த வகையில் அவர்களை விட இவர் எவ்வளவோ மேல். யாருக்கு எதிரான அரசியல் செய்வார்? என்ன கொள்கை என்பதைப்பொறுத்து பாராட்டவோ, விமர்சிக்கவோ படலாம். இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் எனும் திசையை நோக்கி நகரும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ரஜினி மிஸ்: முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு அதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டு தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் ரஜினியின் அரசியல் எண்ட்ரியை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் தனது உடல்நிலை மற்றும் வேறு சில காரணங்களால் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











