Jailer - புலம்பலையே பில்ட் அப் பாட்டா எழுதி வெச்சிருக்காங்க.. ஜெயிலரை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ஜெயிலர் படத்துக்கு விமர்சனம் கொடுத்திருக்கும் ப்ளூ சட்டை மாறன் பாடல்கள் குறித்து பங்கமாக கலாய்த்து பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த்தை சமீப காலமாக திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துவருகிறார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஆரம்பித்ததிலிருந்து ரஜினிகாந்த்தை பருந்து என்று விமர்சிக்கும் அவர் ரஜினி ரசிகர்களையும் கிண்டல் செய்துவருகிறார். அதற்கு ரஜினியின் ரசிகர்கள் பதிலடி கொடுத்தாலும் மாறன் தனது போக்கினை மாற்றிக்கொள்ளவில்லை.

ஜெயிலர் ரிலீஸ்: இப்படிப்பட்ட சூழலில்தான் ஜெயிலர் படம் நேற்று வெளியானது. நெல்சன் திலீப்குமாருக்கும், ரஜினிகாந்த்திற்கும் இது முக்கியமான படமாகவே கருதப்பட்டது. அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து இரண்டு பேரும் பணியாற்றியிருக்கிறார்கள் என படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர். படம் தங்களை திருப்திப்படுத்திவிட்டது நிச்சயம் இது ரஜினிக்கும், நெல்சனுக்கும் கம்பேக்தான் என உறுதியாக சொல்கின்றனர்.
வசூல் மழை: படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருவதால் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் 49 கோடி ரூபாயை படம் வசூலித்திருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 23 கோடி ரூபாயை வசூலித்து துணிவு படம் படைத்திருந்த சாதனையை முறியடித்திருக்கிறது ஜெயிலர். அதேபோல் உலக அளவிலும் ஜெயிலர் வசூல் ஜரூராக நடந்துவருகிறது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: படம் பற்றி ஒருபக்கம் இப்படி மகிழ்ச்சியான செய்திகள் வந்துகொண்டிருந்தாலும் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் கோமாவுக்கே போய்விட்டார்கள். நினைத்த படத்தை எடுக்கவில்லை கிடைத்த படத்தைத்தான் எடுத்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள் என பங்கமாக பேசியிருக்கிறார். கதையையும், மேக்கிங்கையும் கடுமையாக விமர்சிக்கும் அவர் இசையையும், பாடல்களையும்கூட விட்டுவைக்கவில்லை.
அனிருத் இசை: தனது விமர்சனத்தில் இசை பற்றி பேசியிருக்கும் அவர், "படத்துல உருப்படியான விஷயம் அனிருத்தின் இசைதான். ஆனால் அது கேட்கும்போது நன்றாக இருந்தது. விஷுவலாக நன்றாக இல்லை. படம் என்ன மூடில் போகிறது என்று புரியாமல் அனி இசையமைத்திருக்கிறார் போல. அதனால் படம் ஒருபக்கமும், இசை ஒருபக்கமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

காவாலா பாடலுக்கெல்லாம் ரசிகர்கள் ஆடுவார்கள் என எதிர்பார்த்தால் கையை கன்னத்தில் வைத்து உட்கார்ந்துவிட்டார்கள். அந்தப் பாடலையும் ஒழுங்காக படமாக்கவில்லை. இடை இடையே நிறைய இண்ட்டர் கட்ஸ் வருகின்றன. பாட்டுக்கு நடுவே காமெடி செய்கிறார்கள், சீரியஸாக எதையோ செய்கிறார்கள். பாடலை ரசிக்கவே விடவில்லை. படத்தில் இவர்களாக எந்த நல்ல விஷயத்தையும் செய்யவில்லை.. அதுவாக அமைந்த நல்ல விஷயத்தையும் கெடுத்து வைத்திருக்கிறார்கள்.
புலம்பலே பாட்டா?: எம்ஜிஆர் காலத்திலிருந்தே பில்ட் அப் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் ஜெயிலரில் புலம்பலையே பில்ட் அப் பாடலாக எழுதி வைத்திருக்கிறார்கள். ஊரின் டீக்கடையில் பெருசுங்க உட்கார்ந்துருக்கும். அப்போது 20 வயது பையன் ஒருத்தன் சிகரெட் அடிச்சிட்டு போவான். உடனே இந்த பெருசு இவனோடு அப்பன், தாத்தன்லாம் நான் வந்தாலே எழுந்து நின்றுவாங்க. இவனைப் பார்த்தியானு இன்னொரு பெருசுட்ட சொல்லும். அப்படித்தான் இருக்கு ரஜினிக்கான பில்ட் அப் பாடல். யப்பா பட்டத்தை பறிச்சிடாதீங்க ப்பா என்ற புலம்பலைத்தான் பாட்டாக எழுதியிருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











