Blue Sattai Maran - ஜெயிலர் ஒரு இன்ஸ்டன்ட் உப்மா.. விடாமல் துரத்தும் ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ஜெயிலர் படம் ஒரு இன்ஸ்டன்ட் உப்மா என்று திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார்.
தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் படுதோல்வி ரஜினியையும், ரஜினி ரசிகர்களையும் ரொம்பவே பாதித்தது. இதன் காரணமாக ரஜினியின் சம்பளம் குறைக்கப்பட்டுவிட்டது, அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டது போன்ற பேச்சுக்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி கண்டிப்பாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான். அந்த நாற்காலியிலிருந்து ரஜினிகாந்த் இறங்கிவிட வேண்டும் என்றும் பலர் பேசினார்கள்.

ரஜினி vs விஜய்: இதன் காரணமாக ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்கள் தொடர்ந்து மோதல்கள் எழுந்துவந்தன. இப்படிப்பட்ட சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிரது. நெல்சனின் மேக்கிங்கும், ரஜினியின் நடிப்பும் அருமையாக இருந்தது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
வசூல்: படம் இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் முழுவதும் வசூலித்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பை அடுத்து விக்ரம் படத்தின் வசூல் சாதனையை ஜெயிலர் படம் எளிதாக முறியடித்துவிட்டதாகவும்; ரஜினிதான் நம்பர் 1 என்பதை ஜெயிலர் படம் மீண்டும் நிரூபித்திருக்கிறது என்றும் ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்கின்றனர்.
ப்ளூ சட்டை மாறன்: ஆனால் ஜெயிலர் படத்தின் வசூல் குறித்து வரும் தகவல்களில் துளிக்கூட உண்மை இல்லை என பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து விமர்சனம் வைத்துவருகிறார். ரஜினியின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் ஜெயிலர் வசூல் என்று சொல்லி பெரிய பெரிய வடையாக சுடுகிறார்கள் என காட்டமாக சமூக வலைதளங்களில் விமர்சித்துவருகிறார்.
மீண்டும் விமர்சனம்: இதற்கிடையே படம் வெளியாகி 20 நாட்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில் பாக்ஸ் ஆபிஸ் ரேஸிலிருந்து ஜெயிலர் முழுமையாக விலகிவிட்டது. இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "டேய் பொடிமாஸ்களா.. ஜெயிலர் வடை மிஷினை எப்ப நிறுத்தப்போறீங்க? நீங்க என்னதான் முக்குனாலும் விக்ரம் படத்துடன் ஒப்பிட்டால் இது ஒரு ஆறிப்போன உப்மா மேக்கிங்தான்.
யார் நம்பர் ஒன்: இங்கே யார் அசல் நம்பர் ஒன் என்பதற்கு லியோ அல்லது இந்தியன் 2 படங்கள் பதில் சொல்லலாம். ஒருவேளை இவ்விரு படங்களும் வசூலில் தோற்றாலும்.. காஸ்டிங், மேக்கிங் உள்ளிட்ட பல காரணங்களுக்காக நிச்சயம் பேசப்படும். ஜெயிலர் ஒரு இன்ஸ்டன்ட் உப்மா. பார்த்தவுடன் மறந்து போகின்ற படைப்பு. தட்ஸ் ஆல். உண்மையை ஏற்க விரும்பாத பருந்துக்குஞ்சுகள் கமண்ட்டில் வழக்கம்போல கதறி மாயுங்கள். யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை'' என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











