IND VS AUS - இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி.. தலீவரின் வாய் முகூர்த்தம்.. ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை
சென்னை: IND VS AUS World Cup Final(இந்தியா Vs ஆஸ்திரேலியா உலகக்கோப்பை இறுதிப்போட்டி) உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து ரஜினியை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார்.
2023 ஐசிசி உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் இந்திய அணி வரிசையாக 10 போட்டிகளில் வெற்றி பெற்றும்; ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்றும் இறுதிப்போட்டிக்கு வந்தன.

கம்மின்ஸின் சபதம்: இறுதிப்போட்டியில் கண்டிப்பாக இந்தியா வென்றுவிடும் என்பதே பலரின் கணிப்பாக இருந்தது. அதேசமயம் போட்டி தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “போட்டியை காண வரும் 1.30 லட்சம் பேரும் இந்தியாவுக்கே சப்போர்ட் செய்வார்கள். ஆனால் அவர்களை அமைதிப்படுத்துவதுதான் எங்களின் இலக்கு” என்று போல்டாக பேசியிருந்தார்.
சபதத்தை நிறைவேற்றிய கம்மின்ஸ்: போட்டியானது பெரிய எதிர்பார்ப்போடு நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்கம் தந்தனர். இந்த தொடர் முழுக்கவே பவர் பிளேவில் ரன் ரேட்டை ஏற்றும் ஸ்ட்ரேட்டஜியை வைத்திருந்த ரோஹித் இறுதிப்போட்டியிலும் அதை கடைப்பிடித்து அதிரடியாக ஆடினார். ஆனால் மறுமுனையில் திணறிக்கொண்டிருந்த சுப்மன் கில் 4 ரன்களில் வெளியேறினார்.
அதனையடுத்து ரோஹித்தும் கோலியும் இணைந்தனர். ஆனால் இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. ரோஹித் 47 ரன்களில் வெளியேற அடுத்ததாக கோலியும், ராகுலும் இணைந்து நிதானமாக ஆடினர். கிட்டத்தட்ட 90 பந்துகள் வரை பவுண்டரிகளே வரவில்லை. இதன் காரணமாக ஒட்டுமொத்த மைதானமும் அமைதி நிலைக்கு சென்றது. அதனை பார்த்த பலரும் போட்டி நடந்துகொண்டிருந்தபோதே கம்மின்ஸ் தனது சபதத்தை நிறைவேற்றிவிட்டதாக கமெண்ட்ஸ் செய்தனர்.
போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா: கோலி 54 ரன்களில் அவுட்டாக ராகுல் மட்டும் நிலைத்து நின்று ஆடி 66 ரன்கள் டுக்க மற்றவர்கள் சொதப்பினார்கள். இதன் காரணமாக 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா விரைவாக மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் ஹெட் மற்றும் லபுஷேனின் ஆட்டத்தால் வெற்றி பெற்று ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
தலீவர் வாய் முகூர்த்தம்: இந்நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து அதை வைத்தும் ரஜினிகாந்த்தை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார். அதாவது மும்பையிலிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் இந்த முறை உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்திருந்த அவர், 100 சதவீதம் கப் நமக்குதான் என குறிப்பிட்டிருந்தார். அதனை மேற்கோள் காட்டி ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் தலீவரின் வாய் முகூர்த்தம் என கலாய்த்திருக்கிறார். அவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











