Blue Sattai Maran - பேச்சே இல்லை வீச்சுதான் என்பதை செயலில் காட்டுங்கள்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்
சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) பேச்சே இல்லை வீச்சுதான் என்பதை செயலில் காட்டுங்கள் என்று ரஜினிகாந்த்தின் ஆதரவாளர்களை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் தனியாக யூட்யூப் சேனல் ஆரம்பித்து அதில் திரைப்பட விமர்சனங்களை பதிவிட்டுவருகிறார். அவரது விமர்சனத்துக்கு பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அதேசமயம் விமர்சனத்தில் எல்லை மீறி செல்கிறார்; உருவ கேலி வேறு செய்கிறார் என்று பலர் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். மேலும் எல்லோரின் படங்களையும் சகட்டுமேனிக்கு விளாசுகிறாரே இவர் ஒரு படம் எடுத்தால் என்ன என்றும் ரசிகர்கள் கேள்விகள் எழுப்பினர்.

ஆன்டி இந்தியன்: அதனையடுத்து ஆன்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார். பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சிறப்பு காட்சியையும் போட்டு காண்பித்தார். ரிலீஸானதும் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். இப்படி படம் எடுக்கும் ஒருவர்தான் மற்ற படங்களை விமர்சிக்கிறாரா என ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை.
ரஜினியை பங்கம் செய்யும் ப்ளூ சட்டை: ப்ளூ சட்டை மாறன் சமீபகாலமாக ரஜினிகாந்த்தை கடுமையாக ட்விட்டரில் தாக்கிவருகிறார். அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்த அவர் அந்தப் படம் வசூலித்ததாக வரும் அத்தனையும் பொய்தான்; ரஜினியின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் வடை சுடுகிறார்கள் என்று தொடர்ந்து கூறிவருகிறார்.
சீக்ரெட் மீட்டிங்: சில நாட்களுக்கு முன்பு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வதற்கு ஒரு நாள் முன்பு சீக்ரெட்டாக விமர்சகர்களை சந்தித்ததாகவும். அதில் தானும் சென்றிருந்ததாகவும் அப்போது சில கசப்பான நிகழ்வுகள் நடந்ததாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி அப்போது தன்னால் எடுக்கப்பட்ட வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதாகவும் தெரிவித்து வடிவேலு காமெடி காட்சியை பதிவு செய்திருந்தார்.
ரெய்டுக்கு பயப்படுகிறார்: அதேபோல் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்ததை விமர்சித்த மாறன், ரஜினிக்கு மோடிதான் எஜமான் என்றும். சோனியாவையோ, ராகுலையோ சந்தித்தால் ரெய்டு வந்துவிடும் என்று அவர் பயப்படுகிறார் எனவும் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்தின் ஆதரவாளர்களையும், சில யூட்யூப் சேனல்களையும் விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: அவரது தனது ட்விட்டர் பக்கத்தில், "இனி பேச்சே இல்லை. வீச்சுதான்: நான் தப்பா பேசியிருந்தா சம்மந்தப்பட்ட நடிகர் வழக்கு தொடுக்கட்டும். அதை எனது வழக்கறிஞர்கள் மூலம் சந்திக்கறேன். சிறை தண்டனை விதித்தால் உள்ளே போகிறேன். நான் தரம் தாழ்ந்த விமர்சனம் செய்வதாக அறிவுரை சொல்லி, எச்சரிக்கை விடுத்த யோக்கிய சிகாமணிகளே.. இந்த உத்தமர்களின் தரம் குறித்து கேள்வி கேட்க உங்களுக்கு வக்கு இருக்கிறதா? இப்போது மட்டும் உங்கள் அறச்சீற்றம் எந்த பொந்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது?
இதற்கு உங்களிடம் பதில் இல்லையென்றால்... இனி என்னைப்பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லையென்று அர்த்தம். உங்கள் வேலை எதுவோ அதை மட்டும் பார்க்கவும். உங்கள் உபதேச வெங்காய மூட்டைகளை அவிழ்க்க வேண்டாம். முதலில் என் மீது இவர்களில் யாரேனும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ வழக்கு தொடுக்கட்டும். அதன்பிறகு அவர்கள் பேசிய பேச்சுகளை ஆதாரமாக வைத்து நான் வழக்கு தொடுக்கிறேன். உதாரணம்:
போலியான வசூல் கணக்கை சொல்லி பொய்க்கணக்கு காட்டுதல், தனிநபரை கொச்சையாக பேசுதல் உள்ளிட்டவை. ஒவ்வொருவரின் ட்வீட் மற்றும் யூட்யூப் பேட்டிகளுக்கான ஸ்க்ரீன் ஷாட், லிங்க் உள்ளிட்டவை என்னிடம் உள்ளன. நீங்கள் விரைவில் வழக்கு தொடுக்கும் ஆட்டத்தை ஆரம்பியுங்கள். ஐ ஆம் வைட்டிங்.
இதுவரை உங்களைப்பற்றி நான் பேசியதே இல்லை. நீங்கள் வாயை விட்டதற்கு எதிர்வினை மட்டுமே ஆற்றியுள்ளேன். ஆகவே முதல் விசாரணை உங்களிடம் இருந்தே துவங்கும். இப்படி கொச்சையான Thumbnail வைப்பது, அநாகரீக ஆட்களை பேட்டி எடுப்பது, அதில் பேசப்படும் கொச்சையான வார்த்தைகளை அப்படியே வெளியிடுவது என ஊடக தர்மத்திற்கு எதிராக செயல்படும் சேனல்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்படும்.
'அனைத்து வார்த்தைகளுக்கும் பங்கேற்பாளர்களே பொறுப்பு. எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை' என பொறுப்பு துறப்பு போட்டு நீங்கள் தப்பி விட இயலாது. 'கண்ணில் சொட்டு மருந்து போட்டதால்.. தெரியாமல் ஷேர் செய்துவிட்டேன்' என்று உச்சநீதிமன்றத்தில் .எஸ்.வி.சேகர் சொன்னதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்த செய்தியை படித்தீர்களா அல்லது ஜெயிலர் பற்றி வடை சுடவே நேரம் போதவில்லையா? ஆகவே நீதிமன்றத்தில் நீங்கள் சொல்லும் சாக்குகள் எதுவும் பலிக்காது.
செய்தி சேனல் விவாத நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்புகையில்... யாரேனும் கொச்சையாக பேசினால் 'வார்த்தைகளில் கவனம் தேவை. இதை அனுமதிக்க இயலாது' என்பார் நெறியாளர். அதை மீறி பேசினால் அவரது மைக் அணைக்கப்படும். மேலும் பொங்கினால் அந்த நபரின் திரை நீக்கப்படும் அல்லது அவர் வெளியேற்றப்படுவார். அதன்பிறகு ரெகார்ட் செய்யப்பட்ட வெர்ஷன் வரும்போது அந்த நபர் பேசிய கெட்ட வார்த்தைகள் பீப் செய்யப்படும் அல்லது நீக்கப்பட்டிருக்கும். இதுதான் ஊடக அறம்.
இதை செய்யாமல்... வீடியோக்களை வெளியிடும் யூட்யூப் சேனல்களின் எடிட்டர்கள், நிர்வாகிகள், முதலாளிகள் மற்றும் களத்தில் இருக்கும் ஆங்கர்களே... இதுதான் உங்கள் தரமா? ரஜினி எனும் நடிகரை புகழ்ந்து தள்ளுங்கள். 1,000 கோடி, 2,000 கோடி வடைகளை சுடுங்கள். ஆனால் அவருக்கு இணையாக என் போன்ற வன்ம கக்கியின் போட்டோவை Thumbnail ஆக வைத்து ரஜினி மற்றும் உங்கள் சேனலின் தரத்தை இறக்கி கொள்ளாதீர்கள்.
பருந்துகள் பருந்துகளாக வானில் இருப்பதே உங்களுக்கு பெருமை. இனியும் தாமதிக்காமல் சம்மந்தப்பட்ட நடிகர்கள், யூட்யூப் சேனல்கள் அல்லது அந்த உலகமகா விருந்தினர்கள்... உடனே வழக்கு தொடுக்கவும். இனி பேச்சே இல்லை. வீச்சுதான் என்பதை செயலில் காட்டுங்கள். இது உங்கள் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால். தன்மானம் இருந்தால் உடனே செயலில் இறங்கவும். வாயில் சுட்ட வடைகள் எல்லாம் போதும்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











