Blue Sattai Maran - விஜயகாந்த் சமாதியில் விஷால் அஞ்சலி.. கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை: விஜயகாந்த் நினைவிடத்துக்கு இன்று சென்ற விஷால் அஞ்சலி செலுத்தினார். அதனையடுத்து அங்கு வைத்து அன்னதானம் வழங்கினார். இந்த சூழலில் ப்ளூ சட்டை மாறன் விஷாலை வைத்து கடுமையாக ட்ரோல் செய்திருக்கிறார். அவரது ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக அவர் மற்ற நடிகர்களையும் கிண்டல் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. பிரபலங்கள் முதல் சாமானியர்கள்வரை திரண்டு சென்று அவரது உடலுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் செலுத்தப்பட்டது.

அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்: விஜயகாந்த் மறைவுக்கு சூர்யா, சூரி, விஷால், கார்த்தி, ஆர்யா, வடிவேலு என ஏகப்பட்ட பேர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. அது கடுமையான கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது. மூத்த நடிகர், நடிகர் சங்க தலைவராக இருந்தவர், பலரது கரியருக்கு பல உதவிகளை செய்தவர். அப்படிப்பட்டவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதில் என்ன வந்துவிடப்போகிறது என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் மேற்கூறியவர்களில் சிலர் வெளிநாட்டில் இருந்ததால் வர முடியவில்லை என கூறப்பட்டது. வடிவேலுவோ ஒருபடி மேலே சென்று இதுவரை இரங்கல்கூட தெரிவிக்கவில்லை.
விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத நடிகர்கள், நடிகைகள் என பலரும் அவரது நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இதற்கிடையே விஜயகாந்த் உயிரிழந்தபோது விஷால் அமெரிக்காவில் இருந்தார். அப்போது அவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
விஷால் அஞ்சலி: ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்: இந்நிலையில் விஷால் இன்று விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகர் ஆர்யாவும் தனது அஞ்சலி செலுத்தினார். மேலும் அஞ்சலி செலுத்தி முடித்துவிட்டு அன்னதானத்தையும் வழங்கினார் அவர். இந்த சூழலில் விஷால் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதை வைத்து பிரபல திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், கேப்டன் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார் விஷால். சோஷியல் மீடியாவில் பரபரப்பு" என ட்ரோல் செய்து ட்வீட் செய்திருக்கிறார்.
விஜயகாந்த் சாமி: முன்னதாக அஞ்சலி செலுத்தி முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "விஜயகாந்த் அண்ணனின் அலுவலகத்துக்கு யார் சென்றாலும் பசியோடு வரமாட்டார்கள். எல்லோரையும் இறந்த பிறகுதான் சாமி என்று சொல்வார்கள். ஆனால் கேப்டன் விஜயகாந்த் ஐயாவோ வாழும்போதே சாமியாகத்தான் இருந்தார். அவரை சாமி என்றுதான் அழைக்க தோன்றும். அவ்வளவு நல்லது செய்திருக்கிறார்.
ஏன் வரவில்லை: இந்தியாவுக்குள் எந்த மாநிலத்தில் இருந்திருந்தாலும் நான் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்திருப்பேன். ஆனால் வெளிநாட்டில் சிக்கிக்கொண்டேன். அப்போதெல்லாம் எனக்குள் நானே, கையாலாகாதவன் ஆகிட்டியே டா என்றுதான் சொல்லிக்கொண்டே இருந்தேன். விஜயகாந்த் சாமியின் காலை கடைசியாக தொட்டு கும்பிடும் பாக்கியம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது.
நடிகர் சங்கத்தின் கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைப்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. கண்டிப்பாக அவரது பெயர் அந்தக் கட்டடத்துக்கு வைக்கப்படும் அது உறுதி. அவரது பெயர் வைப்பதற்கு அந்த சங்கத்தில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என யாருமே எந்த விதமான மாற்றுக்கருத்தையும் சொல்லமாட்டார்கள். ஏனெனில் சங்கத்துக்கு அவர் அவ்வளவு செய்திருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











