தன் கையால் வண்டி ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. ப்ளூ சட்டை மாறன் கலாய் என்ன இப்படி இருக்கு?
சென்னை: முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் விஜய் தன்னுடைய பணிகளை மும்முரமாக செய்துவருகிறார். வழக்கம்போல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருந்தாலும் தன்னால் முடிந்த அளவுக்கு அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகளையும் அவர் செய்துவருகிறார். எதிர்க்கட்சியினரும் தவெகவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துவருகின்றன. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத எழுச்சியை பெற்றிருக்கிறது தவெக. இதுவரை தமிழ்நாட்டின் அரசியல் முகங்களாக இருந்த திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி அரியணையில் ஏறியிருக்கிறது. சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்ததை அடுத்து; எந்த பிரச்னையும் இல்லாமல் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய். இதனால் தவெகவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முடிவு மறு பரிசீலனை: அதேசமயம் அதிமுகவின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்திருப்பதை அடுத்து தவெக அமைச்சரவையிலும் அவர்களை சேர்க்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இதற்கு விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தங்காளது அதிருப்தியை தெரிவித்திருக்கின்றன. அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடையாது என தங்களுக்கு தவெக விளக்கமளித்திருப்பதாகவும் நம்பிக்கையோடு பேசியிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.
ஒரே விளம்பரமா: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க விஜய்யின் ஆட்சியில் குறைகளும் அதிகம் சொல்லப்பட்டுத்தான் வருகின்றன. அதாவது சிங்க பெண் பாதுகாப்பு படை உள்ளிட்ட பல திட்டங்கள் ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் இருந்ததுதான்; அந்த ஸ்டிக்கரை கிழித்துவிட்டு புதிய பெயரில் ஒரு ஸ்டிக்கரை மட்டும்தான் இந்த ஆட்சி ஒட்டுகிறது என சகட்டுமேனிக்கு விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. முக்கியமாக தலைமை செயலகத்துக்கு விஜய் உணவு எடுத்து வருகிறார். காலையிலேயே வந்துவிடுகிறார் என்று சொல்வதெல்லாம் வெறும் விளம்பரம் மட்டுமே என்பது எதிர்க்கட்சியினரின் கருத்து.
வண்டி ஓட்டிய முதலமைச்சர்: மேலும் இன்று விஜய் செய்த இன்னொரு செயலும் ட்ரோலுக்கு உள்ளாகியிருக்கிறது. அதாவது தமிழ்நாடு அரசின் மருத்துவ துறைக்கு 40 புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதனை முதலமைச்சர் விஜய் வழங்கினார். அப்போது வாகனத்தின் தரம் எப்படி இருக்கிறது என்பதை தானே ஓட்டி பார்த்து தெரிந்துகொண்டார். வழக்கம்போல் இதற்கும் தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் சோஷியல் மீடியாக்களில் ஃபயர் விட தொடங்கிவிட்டார்கள்.
கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இதற்கு எதிர்த்தரப்பினரும் கிண்டல் போஸ்ட்டுகளை சோஷியல் மீடியாவில் வரிசையாக இறக்குகிறார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " தன் கையால் தானே மதிய உணவு சாப்பிட்டதை தொடர்ந்து.. தன் கையால் தானே வண்டி ஓட்டினார். வைரலாகும் வீடியோ" என கிண்டல் செய்து போஸ்ட் போட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ என்ன ப்ளூ சட்டை இப்படி கலாய்த்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்து அந்த ட்வீட்டை வைரலாக்கிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
