என்னது டீன்ஸ் படம் ஹிட்டுனு சொல்றாரா பார்த்திபன்?.. வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: தமிழில் ஃபேமஸான திரை விமர்சகராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன். யாருடைய படமாக இருந்தாலும் கிழித்து தொங்கவிடும் அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்; பலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். இருந்தாலும் தனது மனதுக்கு பட்டதை திரை விமர்சனமாக பேசிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி ஆன்டி இந்தியன் என்ற படத்தையும் அவர் இயக்கினார். இந்தச் சூழலில் ப்ளூ சட்டை மாறன் பார்த்திபனை மீண்டும் வம்புக்கு இழுத்து ட்வீட் செய்திருக்கிறார்.
உலகமே இப்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பலர் யூட்யூப் சேனல்களை ஆரம்பித்து பல விஷயங்களை செய்துவருகின்றனர். அதில் ஒன்றுதான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது. 90களில் தொலைக்காட்சியில் வந்த சினிமா விமர்சனங்களைவிடவும் தற்போது யூட்யூப் சேனல் மூலம் வரும் விமர்சனங்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.அதன் காரணமாக பலரும் திரை விமர்சகர்களாக மாறியிருக்கின்றனர்.

ப்ளூ சட்டை மாறன்: அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ப்ளூ சட்டை மாறன். மற்ற யூட்யூப் திரை விமர்சகர்களைவிடவும் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது அதிகம். அதற்கு காரணம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் யாருடைய படமாக இருந்தாலும் கிண்டல் செய்து அந்த படத்தை ஒருவழியாக்கிவிடுவார். அதனால் ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். இருப்பினும் ஒருகட்டத்துக்கு மேல் அவர் மேல் விமர்சனமும் வைக்கப்பட்டது.
தனிநபர் தாக்குதல்: அதற்கு காரணம் அவர் தனி நபர் தாக்குதலை தொடர்ந்து நடத்திவருவதுதான் என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வலிமை படத்துக்கு கொடுத்த விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலி செய்திருந்த அவர், விக்ரம் படத்தின் விமர்சனத்தில் ஜாஃபரையும் உருவ கேலி செய்திருந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.
இரவின் நிழல்: இதற்கிடையே தான் இயக்கிய இரவின் நிழல் படம்தான் உலகிலேயே முதல் சிங்கிள் ஷாட் படம் என்று பார்த்திபன் தொடர்ந்து தெரிவித்துவந்தார். ஆனால் அதெல்லாம் இல்லை ஹாலிவுட்டில் அப்படி ஒரு படம் வந்துவிட்டது என்று போட்டு உடைத்தார் ப்ளூ சட்டை மாறன். அதனையடுத்து ப்ளூ சட்டையை விமர்சித்தும், கண்டித்தும் ட்வீட் செய்திருந்தார் பார்த்திபன்.
பார்த்திபனின் டீன்ஸ்: அந்த விவகாரம் சில வருடங்களுக்கு முன்பு பேசுபொருளானது. அதனையடுத்து இருவரும் தங்களது வேலைகளை கவனித்துவந்தனர். இப்போது டீன்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார் பார்த்திபன். படமானது இந்தியன் 2வுக்கு போட்டியாக கடந்த 12ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு ஓரளவும் நல்ல வரவேற்பே கிடைத்திருக்கிறது. அதேசமயம் இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்துவிட்டதாக பலரும் கூறுகிறார்கள்.
மீண்டும் பிரச்னை?: சூழல் இப்படி இருக்க டீன்ஸ் படம் குறித்து பேசியிருந்த பார்த்திபன், 'டீன்ஸ் படத்துக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகிவிடலாம் என்று நினைத்தேன். இப்போது நீங்கள் கொடுக்கும் பாராட்டுல, ஓ என்று சந்தோஷத்தில் நான் அழுவது உங்களுக்கு கேட்க வாய்ப்பு இல்லை. இது போதாது இன்னும் என்னை சந்தோஷத்தில் சாகடிங்க'’என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் பேசியதை மேற்கோள் காட்டி, 'படம் ஹிட்டுனு சொல்றாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் பார்த்திபனை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டாரா ப்ளூ சட்டை மாறன் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











