வடிவேலுவின் கோமாளித்தனம்..இப்படி இருந்தால் தப்பிக்க முடியாது..நொந்துட்டோம்..விளாசிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை: வடிவேலு இப்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். சுந்தர். சி இயக்கத்தில் அவர் நடித்திருந்த கேங்கர்ஸ் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. கேங்கர்ஸ் திரைப்படத்தில் வடிவேலு கம்பேக் கொடுத்துவிட்டார் என்று ஒருதரப்பினர் சொன்னாலும்; இன்னொரு தரப்பினரோ அப்படி ஒன்றும் பெரிதாக அவர் காமெடி செய்யவில்லை என்றும் கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் ப்ளூ சட்டை மாறன் வடிவேலுவை விமர்சனம் செய்திருக்கிறார்.
வடிவேலுவின் கால்ஷீட் இல்லாமல் ஒரு படமும் இல்லை என்ற நிலைமைதான் ஒருகாலத்தில் இருந்தது. ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் வேரியேஷனை காண்பித்து கலக்கிய அவர்; விஜயகாந்த்தோடு மோதலில் ஈடுபட்டார். எனவே விஜயகாந்த்துக்கு எதிராக களமாட முடிவு செய்து 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மேடைகளில் ஏறி அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் அதிமுக - தேமுதிக கூட்டணி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது. எனவே வடிவேலுவை வைத்து படங்கள் செய்தால் பிரச்னைகள் வருமோ என்று பலரும் ஒதுங்க தொடங்கினார்கள் அல்லது வடிவேலுவை ஒதுக்க தொடங்கினார்கள்.

மீம்ஸ் நாயகன்: சினிமாவிலிருந்து அவர் ஒதுங்கினாலும் சமூக வலைதளங்களில் உருவாகும் மீம்ஸ்களின் நாயகனாக மாறினார். அதுமட்டுமின்றி எந்த சேனலை வைத்தாலும் வடிவேலுவின் காமெடிகளே ஓடிக்கொண்டிருந்தன. இது ஒருபக்கம் இருக்க இம்சை அரசன் 24ஆம் புலிகேசி தொடர்பாக அவருக்கு புது பிரச்னையும் முளைத்தது. ஒருவழியாக அவரை சுற்றியிருந்த அத்தனை பிரச்னைகளும் முடிக்கப்பட்டன. இதன் காரணமாக மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் அவர்.
இரண்டாவது இன்னிங்ஸ்: அதன்படி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக சந்திரமுகி 2 படமும் படுத்துவிட்டது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் நடிப்பு அவ்வளவு அட்டகாசமாக இருந்தது. அதுவரை பார்த்திராத வடிவேலுவை ரசிகர்கள் பார்த்தார்கள். அந்தப் படத்தின் ஹிட்டால் கண்டிப்பாக வடிவேலு அடுத்த ரவுண்டு வருவார் என்று நம்பிக்கையும் பிறந்தது.
சுந்தர். சியுடன் கூட்டணி: சூழல் இவ்வாறு இருக்க சுந்தர். சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படத்தில் கமிட்டானார் வைகை புயல். ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரும் இணைந்த வின்னர், கிரி, நகரம், தலைநகரம் போன்ற படங்களின் காமெடிகள் இன்றளவும் வயிற்றில் சிரிப்பு வெடியை பற்ற வைப்பவை. எனவே இதிலும் அந்தக் கூட்டணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் சென்றார்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்தார்கள். வடிவேலு கம்பேக் கொடுத்துவிட்டார் என்ற் ஒருதரப்பினரும், சுமாரான காமெடிதான் என்று இன்னொரு தரப்பினரும் சொன்னார்கள்.
ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "இம்சை அரசன் படத்திற்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்த அனைத்து படங்களும் அட்டர் ஃப்ளாப். கேங்கர்ஸ் உட்பட. காமெடியனாக நடித்த கத்திசண்டை, சந்திரமுகி 2 போன்றவையும் ஓடவில்லை. வெற்றிப்படங்களை தந்துவந்த சுந்தர் சி. காமடியில் எப்போதோ ஃபீல்ட் அவுட் ஆன வடிவேலுவை மீண்டும் நடிக்க வைத்து.. தனக்குத்தானே ஆப்பை சொருகிக்கொண்டார்.
கலர் கலராக கோமாளித்தனமான உடைகள் அணிவது, விதவிதமாக விக் வைப்பது, பழைய வசனங்களை reference வைத்து பேசுவது என மொக்கை போடாமல்.. தற்கால ரசிகர்கள் விரும்பும் காமடியை செய்தால் மட்டுமே வடிவேலு இனி காமெடியில் ஜெயிக்க முடியும். இல்லாவிட்டால் மாமன்னன் போல நல்ல கேரக்டர்களில் நடித்தால் இன்னொரு ரவுண்ட் வரலாம். தயவு செய்து இந்த பழையபாணி அறுவை காமடிகளை தவிர்க்கவும். தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் மிகவும் நொந்துபோய் இருக்கிறார்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











