மோடியை புகழ்ந்த இளையராஜா.. ப்ளூ சட்டை மாறன் கொடுத்திருக்கும் பட்டத்தை பார்த்தீங்களா?
சென்னை: இளையராஜா அண்மையில்தான் சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றி முடித்தார். அதனைத் தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்க கமிட்டாகியிருக்கும் அவர்; விரைவில் கரூரில் இசை கச்சேரி நடத்தவிருக்கிறார். இதற்கிடையே அவர் அரசியலில் பாஜகவின் ஆதரவாளராக செயல்பட்டுவருகிறார். அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியிருந்தார்.
இசைஞானி, மேஸ்ட்ரோ என்று புகழப்படுபவர் இளையராஜா. அவரது இசையமைப்பில் கடைசியாக விடுதலை 2, தினசரி ஆகிய படங்கள் வெளியாகியிருந்தன. அவற்றில் தினசரி படத்தின் பாடல்கள் சுமாராகத்தான் இருந்தன. அதேசமயம் விடுதலை 2 பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. முக்கியமாக படத்தின் இடைவேளை காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் அவரது இசை கூஸ் பம்ப்ஸை ஏற்படுத்தியதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
சிம்பொனி அரங்கேற்றிய இளையராஜா: சினிமாவில் இசையமைப்பது மட்டுமின்றி சிம்பொனி ஒன்றையும் கடந்த வருடம் உருவாக்கியிருந்தார் அவர். அதனை லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் வைத்து அரங்கேற்றமும் செய்திருந்தார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள்வரை இருந்த அந்த சிம்பொனியை அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவருமே கொண்டாடினார்கள். இந்தியாவிலிருந்து சிம்பொனி அரங்கேற்றிய முதல் நபர் என்ற பெருமையையும் ராஜா இதன் மூலம் பெற்றார்.

இசை கச்சேரி: சிம்பொனியை அரங்கேற்றி முடித்திருக்கும் அவர்; உழைப்பதில் மேற்கொண்டு வேகம் கூட்டியிருக்கிறார். அந்தவகையில் உலகம் முழுவதும் இசை கச்சேரி நடத்த திட்டமிட்டிருக்கிறார். அந்தவகையில் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கும் அவர்; சிம்பொனிக்கு பிறகான தன்னுடைய முதல் கான்செர்ட்டை கரூரில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அந்த கச்சேரிக்கு மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது பலரிடம் பலத்த வரவேற்பை பெற்றது.
ராஜாவின் அரசியல் நிலைப்பாடு: இதற்கிடையே அரசியலை பொறுத்தவரை இளையராஜா பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருந்துவருகிறார். அவருக்கு ஒன்றிய அரசு சார்பில் ராஜ்யசபா எம்.பி பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் பாஜகவை ஆதரிப்பதற்கு ஏகப்பட்ட பேர் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகிறார்கள். ஆனால் ஒருவருடைய அரசியல் நிலைப்பாடு என்பது அவரது தனிப்பட்ட உரிமை. அதனை விமர்சிக்க இங்கே யாருக்குமே உரிமை கிடையாது என்பது ராஜாவின் ரசிகர்களுடைய ஆழமான கருத்தாக இருக்கிறது.
இளையராஜா கொடுத்த பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் இளையராஜா ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "மவுண்ட்பேட்டன் காலத்திலிருந்து இதுவரை இந்தியாவை ஆட்சி செய்தவர்களை பட்டியலிடுங்கள். அவர்களது ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் பாருங்கள். பிரதமர் இந்தியாவுக்கு செய்ததையும் பட்டியலிடுங்கள். அப்போதுதான் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள்.
காசிக்கு சென்றேன்: 1988ஆம் ஆண்டு முதன்முறையாக காசிக்கு சென்றேன். இப்போது சுத்தமாக மாறியிருக்கிறது. கங்கையை சுத்தமாக வைத்திருப்பது யார்? கிட்டத்தட்ட தூய்மையான நீராக அதை மாற்றியது யார்?.கங்கையில் மக்கள் அசுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அதை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு அதை மோடி செய்தார். தேசப்பற்று இல்லாவிட்டால் அது மாதிரி செய்ய முடியாது.
ப்ளூ சட்டை மாறன் கொடுத்த பட்டம்: மற்ற பிரதமர்கள் மோடி போல் செய்யவில்லை. மோடி வேண்டாம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவர் இருக்கிறாரா?. இது என்னுடைய கருத்து" என்று தெரிவித்திருந்தார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், 'சங்கிராஜா' என்று கேப்ஷன் போட்டிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் இளையராஜாவுக்கு ப்ளூ சட்டை சங்கிராஜா என்று பட்டம் கொடுத்துவிட்டாரே என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











