கர்வத்தில் இருந்து விடுபட்டதை கர்வமாக சொன்ன இளையராஜா.. ரவுண்டு கட்டி அடிக்கும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: சிறு வயதிலேயே என்னுடைய கர்வம் அழிந்து விட்டது என புத்தக வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசிய பேச்சு தீயாக இணையத்தில் பரவி வருகிறது. இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர்கள் ஒரு பாடலை உருவாக்க 6 மாதங்கள் வரை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், அந்த காலத்தில் நானெல்லாம் 3 நாட்களில் 3 படங்களுக்கு பின்னணி இசையமைத்து 3 தீபாவளிக்கு அதே போல செய்து பல சாதனைகளை செய்துள்ளேன் என பேசியிருந்தார். இந்நிலையில், கார்த்தி, ரஜினிகாந்த், அஜித் குமார், விஷால் உள்ளிட்ட சினிமா பிரபலங்களை தொடர்ந்து ட்ரோல் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் இளையராஜாவையும் விடவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து சினிமா படங்களை தாண்டி நடிகர்களையும் சினிமா பிரபலங்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசி விமர்சித்து வருவதாக அவர் மீது குற்றச்சாட்டுக்களை ரசிகர்கள் வைத்தாலும் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் தான் கலாய்ப்பதை ரசிக்க ஒரு கூட்டமே இருக்கு என தொடர்ந்து அடித்து நொறுக்கி வருகிறார்.

இளையராஜா பேச்சு: புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா ரங்கராஜ் பாண்டே என்னை ரொம்பவே புகழ்ந்து பேசினார். ஆனால், அவர் பேசியதை எல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை. சிறு வயதில் நான் பாடும் பாட்டுக்களை எல்லாம் அனைவரும் கேட்டு ரசித்தனர். எனக்கு ரொம்பவே கர்வமாகி விட்டது. அதன் பின்னர் தான் புரிந்துக் கொண்டேன் நான் பாடியது சினிமா பாடல் என்று, அதன் இசைக்குத் தான் அவர்கள் கை தட்டினார்கள் என்று, அந்த இசையை உருவாக்கியது எம்.எஸ். விஸ்வநாதன். அப்போது தான் புரிந்துக் கொண்டேன் இந்த கை தட்டல் எனக்கானது அல்ல எம்.எஸ்.விக்காக என்று அப்போதே என் கர்வம் உடைந்து விட்டது என்றார்.
அவங்களுக்கு வரல: தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜா பல படங்களுக்கு இசையமைத்து இசைஞானி என்றும் மேஸ்ட்ரோ என்றும் கொண்டாடப் படுகிறார். அந்த காலத்தில் தொடர்ந்து ஒரு நாளைக்கு 12 ரீல் வாசிப்பேன். 3 ரெக்கார்டிங் தியேட்டரில் காலை 7 மணிக்கு ஒன்று மதியம் 2 மணிக்கு ஒரு பாட்டு, மாலை 7 மணிக்கு ஒரு பாட்டு என 3 பாடல்களை டியூன் போட்டு கம்போஸ் செய்து கொடுத்து விடுவேன். ஆனால், இப்போதெல்லாம் 6 மாசம் ஆகிறது ஒரு பாடலை கொடுக்க, சிலர் 1 வருட போட்டியிலும் உள்ளனர். ஏன்னா அவங்களுக்கு வரல அவ்வளவு தான் என பேசிய பேச்சுக்கள் இதற்கு பேர் தான் கர்வம் என சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
ப்ளூ சட்டை மாறன் விளாசல்: ”கர்வத்தில் இருந்து விடுபட்டதை கர்வமாக சொன்ன இளையராஜா” என ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்வீட் போட்டு இளையராஜாவை விளாசி உள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் இளையராஜாவின் இசைக்கு நாங்கள் அடிமை தான். ஆனால், அவரது பேச்சில் எங்களுக்கு உடன்பாடில்லை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இளையராஜாவின் பேச்சுக்கு ப்ளூ சட்டை மாறன் போலவே இன்னும் சிலர் விமர்சனங்களை அடுக்கி உள்ளனர். அவர் சொன்னதில் தவறு ஒன்றுமில்லை என ஆதரவு குரல்களும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











