Rajinikanth: ஓ மை காட்.. ரஜினியை வைத்து செய்யும் ப்ளூ சட்டை மாறன்.. ஆரம்பித்த பஞ்சாயத்து
சென்னை: ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருந்தாலும் கூலி படத்தின் மீது ரஜினிகாந்த்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் உச்சக்கட்ட நம்பிக்கை இருக்கிறது. சூழல் இப்படி இருக்க இன்று விமான நிலையம் வந்த ரஜினியிடம் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 7 பேர் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலை வைத்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருக்கிறார்.
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ரஜினி ஸ்டைலிலும் படம் முழுமையாக இல்லை; ஞானவேல் ஸ்டைலிலும் படம் முழுமையாக இல்லை என்று ரசிகர்கள் கூறினார்கள். இதனால் ரஜினிகாந்த் கொஞ்சம் அப்செட்தான். இதனையடுத்து அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படம் உருவாகிவருகிறது.

விறுவிறு ஷூட்டிங்: லோகேஷ் இதற்கு முன்னதாக இயக்கிய லியோ திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. இதன் காரணமாக இந்தப் படத்தின் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று காத்திருக்கிறார் லோகேஷ். மேலும் கமல் ஹாசனுக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோன்ற ஒரு ஹிட்டை ரஜினிக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ஆசை. இதன் காரணமாக லோகேஷுக்கு கொஞ்சம் இந்தப் படத்தில் கூடுதல் பிரஷர் இருக்கத்தான் செய்கிறது.
ரஜினியின் அடுத்த படங்கள்: கூலி படத்தில் மும்முரமாக நடித்துவரும் ரஜினிகாந்த் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர்கள் இருவரும் இணைந்த தளபதி படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. மணிரத்னம் தவிர்த்து நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கிறார் ரஜினி. இதன் ப்ரோமோ வீடியோ ஷூட் சில நாட்களுக்கு முன்புதான் நடந்ததாகவும்; வீடியோ ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
சர்ச்சையில் ரஜினி: இப்படி இந்த வயதிலும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அவ்வப்போது தனது பேச்சினால் சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, 'எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் நாடு சுடுகாடாகிவிடும். போராட்டத்தில் சில தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டார்கள்’ என்று கூறினார். அது பெரும் கண்டனத்தை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அதேபோல் திமுக மேடையில் சீனியர் அமைச்சர்கள் பற்றி பேசியதும் அவருக்கு வம்பை வாங்கிக்கொடுத்தது. முக்கியமாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் குறித்து கேட்கப்பட்டபோது எந்த ஏழு பேர் என்று கேட்டார்.
அடுத்த சர்ச்சை: இப்படி தனது வாயால் சர்ச்சையை சம்பாதிக்கும் ரஜினிகாந்த் இப்போது மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார். அதாவது இன்று அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஏழு பேர் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவரோ, 'எப்போ.. ஓ மை காட்.. சாரி’ என்று சொல்லிவிட்டு சென்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள், ரஜினிக்கு இந்த விஷயம்கூடவா தெரியாது. ஒரு ஆறுதல்கூடவா சொல்லமாட்டார் என்று வறுத்தெடுத்துவருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் பற்றி கேட்டபோது யார் அந்த ஏழு பேர் என்று கேட்டார். இப்போது திருவண்ணாமலை 7 பேர் பற்றி கேட்டதற்கு எப்போது நடந்தது என்கிறார். Oh My God” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் இன்னொரு ட்வீட்டில், 'தலீவரின் அதிரடி பஞ்ச்கள். நோ கமெண்ட்ஸ், தெரியாது, எப்போ?, ஓ மை காட்’ என்று பதிவிட்டிருக்கிறார். அந்த ட்வீட்டுகள் ட்ரெண்டாகிவருகின்றன.


Click it and Unblock the Notifications











