விஜய்க்கு அதுவும் கிடையாது.. ரஜினிகாந்த்தை தொடர்ந்து கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்
சென்னை: ப்ளூ சட்டை மாறன் பிரபல திரைவிமர்சகராக இருக்கிறார். அவரது ஒவ்வொரு விமர்சனமும் கேலியும், கிண்டலும் நிறைந்திருக்கும். முதலில் திரை விமர்சனம் மட்டும் செய்துகொண்டிருந்த அவர் சமீபகாலமாக பெரிய ஹீரோக்களை கடுமையாக கலாய்த்துவருகிறார். அதிலும் ரஜினிகாந்த்தை விடுவேனா என்கிறார். இந்த சூழலில் ரஜினிகாந்த்தை மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து போஸ்ட் போட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அது ரஜினி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
யூட்யூப் சேனல்கள் பெருகிவிட்ட காலம் இது. பலரும் அதனை வைத்து தங்களது திறமைகளை தொடந்து நிரூபித்துக்கொண்டே உயர்ந்துகொண்டு செல்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். தனது யூட்யூப் சேனலில் திரை விமர்சகராக பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் அவரது இயல்பான பேச்சு, உடல்மொழி, செய்யும் கிண்டல் என பலரும் ப்ளூ சட்டை மாறனின் ரசிகர்களாக மாறினார்கள். அடுத்தக்கட்டமாக அவரது விமர்சனத்தை கேட்டுவிட்டு படம் பார்க்க செல்ல தொடங்கினார்கள்.

எல்லை மீறிய ப்ளூ சட்டை: ஒருகட்டத்தில் ப்ளூ சட்டை மாறன் சில விமர்சனங்களையும் சந்திக்க ஆரம்பித்தார். அதாவது சகட்டுமேனிக்கு கிண்டல் செய்துகொண்டிருந்த அவர் காலம் போகப்போக உருவ கேலிகளையும் செய்ய ஆரம்பித்தார். வலிமை படத்தின்போது அஜித்தை உருவ கேலி செய்த அவர்; அடுத்ததாக ஜாஃபர் என்பவரையும் உருவ கேலி செய்திருந்தார். இது அவருக்கு பெரும் கண்டனங்களை பெற்றுக்கொடுத்தது. இதுபோன்று பேசுவதை மாறன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் பெருகின.
இயக்கம்: முக்கியமாக எல்லா படங்களையும் சகட்டுமேனிக்கு ஓட்டுகிறாரே இவர் ஒரு படம் எடுப்பாரா என்று ரசிகர்கள் கேட்க தொடங்கினார்கள். அதனையடுத்து ஆண்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. படத்தை பார்த்த ரசிகர்கள், தான் பேசுவதற்கு மட்டும்தான் லாயக்கு என்பதை ப்ளூ சட்டை மாறன் நிரூபித்துவிட்டார் என்று ஓபனாகவே கமெண்ட்ஸ்களை சமூக வலைதளங்களில் போட்டனர்.
ரஜினி மீது குறி: அதேபோல் கடந்த வருடம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து மோதல்கள் வந்தன. அதற்கு காரணம் ரஜினிகாந்த் சொன்ன காக்கா கழுகு கதை. அதை வைத்தும் ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்த்தை தொடர்ந்து அட்டாக் செய்தார். ரஜினியின் சாம்ராஜ்ஜியம் முடிந்துவிட்டதாக மறைமுகமாக தனது ஒவ்வொரு ட்வீட்டிலும் சொல்லிகொண்டே இருந்தார். இதனால் அவர் மீது ரஜினி ரசிகர்கள் உச்சக்கட்ட கடுப்பாகினர். இருந்தாலும் ரஜினியை கலாய்ப்பதை ப்ளூ சட்டை மாறன் விடவேயில்லை.
மீண்டும் கலாய்: இந்நிலையில் ரஜினிகாந்த்தை மீண்டும் கலாய்த்திருக்கிறார் ப்ளூ சட்டை. அதாவது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் ரஜினிகாந்த்தும் உதயநிதியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வாழ்த்தினை தெரிவித்தார். அதனை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "'விஜய் ஜெயிச்சாலும் தொலைபேசி மூலம்தான் வாழ்த்துவீங்களா?' 'அவருக்கு அது கூட கிடையாது. வாழ்த்துகள்னு ஒரே ஒரு வார்த்தைல Gmail அனுப்புவேன். அவ்வளவுதான்' என்று ரஜினி சொல்வதுபோன்று ட்வீட் செய்திருக்கிறார். இது இப்போது ட்ரெண்டாகியுள்ளது.
முன்னதாக ரஜினிகாந்த் முதலில் அரசியலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. அதேசமயம் அரசியலுக்கு வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்; தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அவரது கட்சி 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











