அடாது மழையிலும் வசூல் வேட்டை.. வேட்டையனை பந்தாடும் ப்ளூ சட்டை மாறன்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி வேட்டையன் திரைப்படம் வெளியானது. த.செ.ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்துக்கு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும்பாலும் நல்ல வரவேற்பையே பெற்றது. ஆனால் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக வசூலில் கொஞ்சம் அடி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ப்ளூ சட்டை மாறன் வேட்டையன் படத்தை ட்ரோல் செய்திருக்கிறார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் வேட்டையன். இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி, ராணா டகுபதி என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த பத்தாம் தேதி படமானது திரையரங்குகளில் வெளியானது. முதன்முதலாக ஞானவேலுவுடன் ரஜினி இணைந்திருந்ததால் அந்த காம்போ என்ன மாதிரியான மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள்.

சூப்பர் விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்கள் முழு திருப்தியடைந்தனர். சமூகத்துக்கு தேவையான விஷயங்களையும், ரஜினியின் மாஸுக்கு தகுந்த விஷயங்களையும் சேர்த்து சிறந்த படமாக ஞானவேல் கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதேபோல் இதுமாதிரியான கதைக்கு ரஜினி ஒத்துக்கொண்டதும்; அதற்கு தன்னுடைய நடிப்பால் பெரிதும் துணை நின்றதும் நல்ல விஷயம் என்றும் திரை ஆர்வலர்கள் கூறியிருக்கிறார்கள்.
துஷாரா செம: அதேபோல் ஃபகத் பாசிலை இதுவரை நெகட்டிவ் ரோலில் மட்டுமே தமிழ் சினிமாவில் பார்த்து வந்த சூழலில் இதில் ஜாலியான கேரக்டராக கொண்டு வந்தது ஃப்ரெஷ்ஷாக இருந்தது. மேலும் துஷாரா விஜயனின் நடிப்பு அதகளமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினார்கள். படத்தில் சில குறைகள் இருந்தாலும் அதனை லாவகமாக ஞானவேல் தனது மேக்கிங்கில் கையாண்டிருக்கிறார் எனவும்; ஜெய் பீம் போலவே இந்தப் படமும் ஞானவேலுவுக்கு முக்கியமான படம் என்றும் பாராட்டு பத்திரமும் வாசிக்கிறார்கள்.
வசூல் வேட்டை: இதற்கிடையே சமீபகாலமாக விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். எனவே வேட்டையன் படத்தின் வசூல் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தின் வசூலை தாண்ட வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதன்படி முதல் நான்கு நாட்களிலேயே 240 கோடி ரூபாய் வசூலித்து வேட்டையன் கெத்து காட்டியது. ஒருபக்கம் GOATஐவிட இந்த வசூல் அதிகம் எனவும், மறுபக்கம் இல்லை இது கம்மிதான் என்றும் இதை வைத்து ஒரு பஞ்சாயத்தும் ஆரம்பித்திருக்கிறது.
மழை பாதிப்பு: முதல் நான்கு நாட்களிலேயே இவ்வளவு வசூல் செய்த வேட்டையன் கண்டிப்பாக GOAT படத்தை முந்திவிடும் என்ற கருத்து நிலவியது. ஆனால் வேட்டையன் வசூலுக்கு வேட்டு வைக்கும் விதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்குகிறது. ஆனால் ஆறாவது நாளான நேற்று ஐந்து கோடி ரூபாயை மட்டும்தான் வசூலித்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்: மேலும் நேற்றைய வசூலை பார்த்து, 'மழையிலும் இவ்வளவு வசூலா?' என ஆச்சரியமும் ஏற்பட்டது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வேட்டையன் வசூல் பற்றிய தகவல்களை ட்ரோல் செய்திருக்கிறார். அவர் தனது எக்ஸ் தளத்தில், "அடாத மழையிலும் அடங்காத வசூல் வேட்டை - 'ராஜாதி ராஜா' ராஜகோபால் என வடிவேலு நடித்த ஒரு காட்சியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்திருக்கிறார். அந்த ட்வீட்டும் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











