பான் இந்தியா முயற்சியில் தோல்வியை தழுவிய தமிழ் படங்கள்.. லியோ, ஜெயிலரை வச்சு செய்த ப்ளூ சட்டை!
சென்னை: தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகம் பான் இந்தியா முயற்சியில் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளதாகவும் தமிழ் படங்கள் கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வந்தாலும், தோல்வியையே தழுவியுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் அடுத்த சர்ச்சையை கிளப்பும் வகையில் ட்வீட் போட்டுள்ளார்.
பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ஆன்டி இண்டியன் படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார். ஆனால், தொடர்ந்து படங்களை இயக்குவார் என்று பார்த்தால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் சண்டை போட்டு வருகிறார்.

பான் இந்தியா வெற்றி: தெலுங்கில் ராஜமெளலி இயக்கிய பாகுபலி, ஆர்ஆர்ஆர் மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா உள்ளிட்ட படங்கள் பான் இந்தியா படங்களாக இந்தி பெல்ட்டிலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தின. அதே போல கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மற்றும் காந்தாரா பான் இந்தியா ஹிட் அடித்துள்ளது என ப்ளூ சட்டை மாறன் தென்னிந்தியாவில் டோலிவுட் மற்றும் சாண்டல்வுட்டின் வளர்ச்சியை பாராட்டி உள்ளார்.
விக்ரம் முதல் லியோ வரை வேலைக்கு ஆகல: அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பான் இந்தியா முயற்சி எதுவுமே பெரிதாக கைகொடுக்காமல் தோல்வியடைந்திருப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2, ஜெயிலர் மற்றும் லியோ உள்ளிட்ட எந்தவொரு திரைப்படமும் வட இந்தியாவில் வசூல் ஈட்டவே இல்லை என விளாசி உள்ளார்.

விதை போட்டதே நாம தான்: ஆரம்பத்தில் பான் இந்தியா படத்துக்கான விதை போட்டதே தமிழ் சினிமா தான் என்றும் ரோஜா, இந்தியன், 2.0 உள்ளிட்ட படங்கள் பான் இந்தியா ஹிட் அடித்துள்ளன என ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால், சமீப காலத்தில் மிகப்பெரிய அளவுக்கு இந்தி ரசிகர்களை தமிழ் படங்கள் ஏன் கவரவில்லை என்கிற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. மேலும், பல தமிழ் படங்களை ரீமேக் செய்து இந்தி படங்கள் உருவாகி வரும் நிலையில், நேரடி தமிழ் படங்கள் தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் போல பிரம்மாண்ட வெற்றியை பெறவில்லையே என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











