பட்டாப்பட்டி விற்கத்தான் லாயக்கு.. சினிமா ஜாம்பவான்களே இது உங்களுக்குத்தான்..ப்ளூ சட்டை மாறன் ட்வீட்
சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) பரத்வாஜ் ரங்கன் குறித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு செய்திருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
உலகமே இப்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பலர் யூட்யூப் சேனல்களை ஆரம்பித்து பல விஷயங்களை செய்துவருகின்றனர். அதில் ஒன்றுதான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது. 90களில் தொலைக்காட்சியில் வந்த சினிமா விமர்சனங்களைவிடவும் தற்போது யூட்யூப் சேனல் மூலம் வரும் விமர்சனங்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.அதன் காரணமாக பலரும் திரை விமர்சகர்களாக மாறியிருக்கின்றனர்.

ப்ளூ சட்டை மாறன்: அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ப்ளூ சட்டை மாறன். மற்ற யூட்யூப் திரை விமர்சகர்களைவிடவும் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது அதிகம். அதற்கு காரணம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் யாருடைய படமாக இருந்தாலும் கிண்டல் செய்து அந்த படத்தை ஒருவழியாக்கிவிடுவார். அதனால் ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். இருப்பினும் ஒருகட்டத்துக்கு மேல் அவர் மேல் விமர்சனமும் வைக்கப்பட்டது.
தனிநபர் தாக்குதல்: அதற்கு காரணம் அவர் தனி நபர் தாக்குதலை தொடர்ந்து நடத்திவருவதுதான் என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வலிமை படத்துக்கு கொடுத்த விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலி செய்திருந்த அவர், விக்ரம் படத்தின் விமர்சனத்தில் ஜாஃபரையும் உருவ கேலி செய்திருந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.
பரத்வாஜ் ரங்கன்: மேலும் இவ்வாறு அவர் விமர்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு திரைப்படம் எடுப்பது அவ்வளவு கடினம் என்பதை அவர் ஆன் டி இந்தியன் படத்தின் மூலம் உணர்ந்திருப்பார் என்றும் பலர் கூறினர். ஆனால் அவர் அந்தப்போக்கை நிறுத்துவதாக தெரியவில்லை. சூழல் இப்படி இருக்க தமிழ் படங்களை ஆங்கிலத்தில் விமர்சனம் செய்யும் பரத்வாஜ் ரங்கன் மஞ்சப்பை படத்துக்கு எழுதிய விமர்சனத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
மாறனின் ட்வீட்: அந்த ட்வீட்டில் அவர், "அறிமுக இயக்குனர் ராகவன் படம் எடுப்பதற்கு பதில் பட்டாப்பட்டி டிரவுசர் விற்கப்போகலாம் என்று சொன்னது யார்? அதன் பின்னணி என்ன? தரம் தாழ்ந்த விமர்சனம், தனிநபர் தாக்குதல் கூடாது என்று எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆகச்சிறந்த அறிவுரை தந்து வரும் சினிமா சார்ந்த ஜாம்பவான்களே. இப்பதிவு உங்களுக்கானது.
ராஜ்கிரண், விமல் மற்றும் லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிக்க இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 2014 இல் வெளியிட்ட படம் மஞ்சப்பை. தயாரிப்பு - சற்குணம். இயக்கம் - ராகவன். மஞ்சப்பை படம் சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். அதன் குறைகளை விமர்சிக்கவும் உரிமையுண்டு. எனக்கும் இப்படம் பிடிக்கவில்லை.
இன்னொரு விமர்சனம்: இப்போது நான் கூறவிருப்பது மஞ்சப்பை படத்திற்கு வந்த இன்னொரு விமர்சனம் பற்றிதான். அதை எழுதியவர் தற்போது கலாட்டா ப்ளஸ் யூட்யூப் சேனலில் ஆங்கில விமர்சகராக இருக்கும் பரத்வாஜ் ரங்கன். இவருக்கும், எனக்கும் எவ்வித மனஸ்தாபமும் இதுவரை இல்லை. அவர் தன் வழியில் பயணிக்கிறார். தமிழ்ப்படங்களை ஆங்கிலத்தில் விமர்சிப்போர் லிஸ்டில் நம்பர் 1 ஆக இருப்பது இவர்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் இவர் 2014 இல் எழுதிய மஞ்சப்பை விமர்சனத்தில் நிறை, குறைகளை கூறிவிட்டு இறுதியாக இயக்குனர் ராகவனை கடுமையாக திட்டியுள்ளார் இப்படி: 1. No one can deny a filmmaker the right to make money, but when money is apparently all that the filmmaker cares about, when the craft is so non-existent, we have to wonder why he chooses to make movies.
அர்த்தம்: பணம் சம்பாதிக்கத்தான் இயக்குனர்கள் படம் எடுக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் பணம் சம்பாதிப்பதை மட்டுமே பிரதான குறிக்கோளாக எண்ணி, 'கலை' வடிவத்தை இல்லாமல் செய்தால்? இவர் எல்லாம் எதற்கு படமெடுக்கிறார் என்று ஆச்சர்யப்படுகிறேன்.
2. Why not get into the business of manufacturing, say, striped, baggy underwear? (There's clearly a huge rural market for it.) Why venture into art?
அர்த்தம்: இவர் ஏன் பட்டாப்பட்டி உள்ளாடை தயாரிக்கும் தொழிலை செய்யக்கூடாது? இந்த உள்ளாடைகளுக்கு கிராமப்புறங்களில் நல்ல மார்க்கெட் இருக்கிறதே. அதை செய்யாமல் ஏன் கலைத்துறைக்கு வந்தார்?இது பரத்வாஜின் சொந்த வெப்சைட். இதே விமர்சனம் அப்போது தி ஹிந்து ஆங்கில நாளிதழில் Friday Review பகுதியில் வெளிவந்தது. முன்பொருமுறை இதுபற்றி Club House உரையாடலில் கூறியிருந்தேன். அதன்பிறகு மஞ்சப்பை விமர்சன லிங்க் ஹிந்து வெப்சைட்டில் நீக்கப்பட்டதாக நினைவு. ஒருவேளை உங்கள் கண்ணில் பட்டால் இங்கே ஷேர் செய்யுங்கள்.
க்ரிஞ்ச் ரிவ்யூவர்: பல்லாண்டு காலமாக பல பேட்டிகளில்... 'ப்ளூ சட்டை மாறனை ஒழிக்க வேண்டும். நாகரீகம் தெரியாதவன். திரைத்துறையை அழிக்கிறான். ஒரு படம் எடுக்க 100 பேரின் உழைப்பு தேவைப்படுகிறது. இவனது நெகட்டிவ் விமர்சனத்தால் தயாரிப்பாளர் நடுத்தெருவுக்கு வருகிறார். இயக்குனரின் எதிர்காலம் நாசமாகிறது. சினிமா மூலம் சம்பாதித்து,, அதில் சோறு திங்கும் இவன் சினிமாவிற்கு எதிராக இருக்கிறான். இவனை சும்மா விடக்கூடாது' என்று பல்வேறு யூ ட்யூப் பேட்டிகள் அல்லது ஆடியோ லாஞ்ச்களில் தொண்டை கிழிய பேசி வரும்....
....தியேட்டர் ஓனர் திருப்பூர் சுப்ரமணியம், செய்யாறு பாலு எனும் நபர், தயாரிப்பாளர் 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா அவர்கள், நாகரீகமாக விமர்சனம் செய்வது எப்படியென்று பாடமெடுக்கும் Cringe reviewer Sun TV - Top 10 Movies சுரேஷ் மற்றும் பலர்.. இந்த விமர்சனத்தை படித்ததே இல்லையா அல்லது படித்துவிட்டு இத்தனை ஆண்டுகாலம் அமைதி காக்கிறீர்களா?
திராணி இருக்கிறதா?: இந்த விமர்சனம் வந்து 9 ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை. இப்போதாவது அந்த விமர்சகரின் பெயரை குறிப்பிட்டு உங்கள் பேட்டி அல்லது சினிமா நிகழ்ச்சி மேடையில் கண்டனம் தெரிவிப்பீர்களா? அதற்கான துப்பும், திராணியும் உங்களுக்கு உண்டா?
கருப்பாய் இருப்பவன், ஆங்கிலம் தெரியாதவன், சாதாரண குடும்ப பின்னணி கொண்டவன் என்பதால் வாய்க்கு வந்ததை எல்லாம் கரித்துக்கொட்டி எனக்கு எச்சரிக்கை விடுத்த சூரப்புலிகளே... வெள்ளைத்தோல், நுனிநாக்கு ஆங்கிலம், மேட்டுக்குடி சமூகம் என்றால் மட்டும் வாயில் கொழுக்கட்டையை வைத்துக்கொண்டு இருப்பீர்களா?

இந்த விமர்சனத்தின் மூலம்... படத்தை வெளியிட்ட லிங்குசாமி, தயாரித்த சற்குணம் மற்றும் அறிமுக இயக்குனர் ராகவன் ஆகியோர் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருப்பார்கள்? அதில் நடித்த விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் மற்றும் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் எப்படி வருந்தி இருப்பார்கள்?
வீச்சு புரோட்டா வீரர்கள்: தங்கள் இயக்குனரை பார்த்து 'நீ பட்டாப்பட்டி விற்கத்தான் லாயக்கு. எதற்கு சினிமா எடுக்க வந்தாய்?' என்று எழுதியதை கண்ட... துணை இயக்குனர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? எனக்குத்தெரிந்து மேலே குறிப்பிட்டுள்ள வீச்சு பரோட்டா வீரர்கள் எவரும் இதுகுறித்து வாய்திறக்க வாய்ப்பில்லை.
ஆனால் 'ப்ளூ சட்டையின் விமர்சனம் வெளிப்படையாக இருந்தாலும்... அதை சொல்லும் விதம் ஏற்புடையதல்ல' என்று கூறியுள்ள வலைப்பேச்சு சேனல் நண்பர்கள் அந்தணன், பிஸ்மி மற்றும் சக்திவேல் இதுபற்றி தங்கள் சேனலில் பேசுவார்கள் என நம்புகிறேன். அதில் நித்தம் வெளிவரும் சினிமா செய்திகளில் பேசாவிட்டாலும் 'கேள்வி நீங்க பதில் நாங்க?' பகுதியிலாவது இந்த ஞாயிறு அன்று பேசுவார்களா? கேள்விகளை நான் இங்கு கேட்டுவிட்டேன். இதையே எடுத்துக்கொள்ளுங்கள்.
'கட்டிலுக்கு கீழ ஒருத்தர் இருக்கார். அவரையும் வெளியே இழுங்கய்யா' என்று கூறுவதில் தவறில்லையே? சினிமாவில் இருந்துகொண்டு அதில் வரும் பணத்தில் சோறுதிங்கும் ப்ளூ சட்டை, அதே சினிமாவை ஒழிக்கிறான் என்கிறீர்களே? Baddy என்று செல்லமாக அழைக்கப்படும் பரத்வாஜ் அவர்களை பார்த்து இந்த வீர வெங்காய வசனத்தை, இதே ஆக்ரோஷத்துடன் கேளுங்கள். உங்களை தைரியமான, நடுநிலையான ஆண்மகன்கள் என்று ஒப்புக்கொள்கிறோம். Your countdown starts NOW" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











